அரசாங்கம் கமுந்திங் தடுப்பு முகாமை மூடி விட்டு அதனது தேசியப் பாரம்பரியச் சின்னமாக மாற்ற வேண்டும் என இசா எதிர்ப்பு இயக்கமான GMI என்ற Gabungan Mansuhkan ISA கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்றிரவு அது விடுத்த மூன்று கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.
இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட சட்டம் அமலுக்கு வந்து விட்டதால் பழைய சட்டத்தின் கீழ் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 கைதிகளையும் போலீஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் செயலக உறுப்பினர் அகமட் சுக்ரி ராஸாப் கூறினார்.
கைதிகள் சித்தரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை விசாரிக்க அரசாங்கம் சுயேச்சை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
புக்கிட் அமானில் உள்ள தேசியப் போலீஸ் தலைமையகத்துக்கு அருகில் ஜிஎம்ஐ மெழுகுவர்த்தி விழிப்பு நிலையை அனுசரித்த போது அகமட் பேசினார்.
“கமுந்திங் முகாம் நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய நினைவுச் சின்னமாகும். ஏனெனில் நாங்கள் அந்த இடத்தில் தான் ஒடுக்கப்பட்டோம்,” என அந்தத் தடுப்பு மய்யம் வரலாற்றுச் சின்னமாக மாற்றப்பட வேண்டும் எனத் தாங்கள் விடுத்துள்ள கோரிக்கையை விளக்கிய போது அகமட் கூறினார்.
அந்த மெழுகுவர்த்தி விழிப்பு நிலையில் கிட்டத்தட்ட 30 பேர் கலந்து கொண்டனர். “உண்ணாவிரதம் 10வது நாளாகத் தொடருகிறது”, “ஏன் கைதிகளை சித்தரவதை செய்ய வேண்டும்” எனக் கூறும் சுவரொட்டிகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.
30க்கும் மேற்பட்ட போலீசார் சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஜிஎம்ஐ உறுப்பினர்கள் இசா எதிர்ப்பு சுலோகங்களை முழங்கினர். கவிதைகளையும் வாசித்தனர். தங்கள் அனுபவங்களை எடுத்துரைக்குமாறு இசா கைதிகளுடைய உறவினர்களையும் அழைத்தனர்.