சிறுபான்மையினர் ‘ஆட்சியைக் கைப்பற்ற’ முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார்

பெரும்பான்மை மக்கள் மௌனமாக  இருந்து சாலை ஆர்ப்பாட்டங்கள் வழி சிறுபான்மையினர் ‘ஆட்சியைக் கைப்பற்ற’ அனுமதித்தால் மலேசியா தோல்வி கண்ட நாடாகி விடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.

சிறுபான்மையினர் பகிரங்கமாக வெளிப்படையாகப் பேசுவது அதிகரித்து வருகின்றது என அவர் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசினார்.  சரியான தகவல்களை அறிந்து கொள்ளாத மாற்று ஊடகங்கள் அவர்களுடைய குரலுக்கு வழியாக இருந்து வருகின்றன.

அவரது உரை உத்துசான் மலேசியாவின் ஞாயிற்றுக் கிழமைப் பதிப்பான மிங்குவான் மலேசியாவில் இன்று செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

எழுச்சிகளுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கங்கள் பெரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக மகாதீர் சொன்னார். எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னர் அவை பலருடைய  குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டியிருப்பதே அதற்கு காரணமாகும்.

“அதற்காகவே பொதுத் தேர்தல் நடைமுறை நமக்கு அவசியமாகும். அது எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்றாலும் அது அமைதியானது, திட்டமிடப்பட்டது, மக்களுக்குப் பயனுள்ளது,” என்றார் மகாதீர்.

திருநங்கைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என அண்மைய காலமாக விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் பிரதமர், சிறுபான்மையினர் அந்தக் கோரிக்கைகளை விடுக்கின்றனர் என்றும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் எதிர்காலத் தலைமுறையினருக்கு தீங்கைக் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாம் பரந்த எண்ணங்களைக் கொண்டவர்கள் அல்ல என்பது அதில் சம்பந்தப்படவே இல்லை. ஒரினச் சேர்க்கை அனுமதிக்கப்பட்டால் நமது எதிர்கால தலைமுறையினருக்கு என்ன நேரும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஆண்கள் ஆண்களுடனும் பெண்கள் பெண்களுடனும் உறவு கொண்டு பிரசவிக்க வேண்டுமா ?”

“அவர்கள் தங்கள் சொந்தத் தேவைகள் பற்றி மட்டுமே கவலை கொள்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டு நிலைமையும் மக்கள் நிலைமையும் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவே இல்லை. இதனைத் தான் நாம் சர்வாதிகாரம் அல்லது சுயநலன் எனச் சொல்லுகிறோம்,” என மகாதீர் மேலும் கூறினார்

TAGS: