உத்துசான்: 13வது பொதுத் தேர்தலுக்கு சிங்கப்பூர் பெரிய திட்டங்களை வைத்துள்ளது

சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி (பிஏபி) தனது வழியான டிஏபி மூலம் பிஎன் வீழ்ச்சிக்கு பெருந்திட்டத்தை வகுத்துள்ளதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா குற்றம் சாட்டியுள்ளது.

அந்த பிஏபி கட்சி தீவகற்ப மலேசியாவில் தனது ‘கனவை’ நிறைவேற்றிக் கொள்வதற்கு 48 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறது என உத்துசானின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியாவில் இடம் பெற்றுள்ள Bisik-bisik பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அந்தக் கனவு நனவாவதற்கு டிஏபி மிகுந்த கடப்பாடு கொண்டுள்ளது உண்மையா இல்லையா ?” என அந்தப் பத்தியில் அவாங் செலாமாட் எழுதியுள்ளார்.

அந்தப் புனைப் பெயர் உத்துசான் மிலாயு நாளேட்டின் ஆசிரியர் குழாமைக் குறிப்பதாகும்.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்ட பின்னர் பிஏபி-யிலிருந்து டிஏபி எப்படிப் பிரிந்தது என்பதை விவரிக்கும் அந்தக் கட்டுரை அந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இன்னும் நல்ல உறவுகள் நீடிப்பதாக தெரிவித்தது.

டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் ஒரு காலத்தில் லீ குவான் இயூ-வின் பத்திரிக்கைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளதாகவும் அது குற்றம் சாட்டியது.  லீ, சிங்கப்பூரின் பிரதமராக நீண்ட காலத்துக்குப் பணியாற்றியவர். அந்த மாநகர நாட்டில் அவருக்கு இன்னும் பெரும் செல்வாக்கு உள்ளது.

2008ம் ஆண்டு பினாங்கில் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதில் டிஏபி வெற்றி கண்ட பின்னர் அந்த உறவுகள் மேலும் விரிவடைந்ததாக  அவாங் செலாமாட் கூறிக் கொண்டார். அதற்கு ஒர் ஆண்டு கழித்து அந்த மாநிலத்துக்கு லீ வருகை அளித்ததலிருந்து அந்த உண்மை தெளிவாகிறது என்றார் அவர்.

நல்ல உறவுகள்

பினாங்கு மட்டுமே மலாய்க்காரர் அல்லாதாரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலம் என்பதைச் சுட்டிக் காட்டிய அவாங் செலாமாட், அது பல உள் அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்றார். ஆனால் அவற்றை அந்த ஆசிரியர் விவரிக்கவில்லை.

பினாங்கிற்கு உதவுவதாகக் கூட லீ வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறிக் கொண்ட அவாங் செலாமாட், அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூட லீ கூட்டம் நடத்தி “சிறப்பு தார்மீக ஆதரவை” தெரிவித்துக் கொண்டதாகவும் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், பினாங்குத் தலைவர்கள் இரு வழி வருகைகளை மேற்கொண்டனர் என்றும் அதனால் உறவுகள் மேலும் வலுவடைந்தன என்றும் அவாங் செலாமாட் குறிப்பிட்டார்.

“அவாங் செலாமாட் மிகவும் அதிகமான ஊகங்களை வெளியிட விரும்பவில்லை என்றாலும் பினாங்கு மீது சிங்கப்பூர் காட்டியுள்ள மிகுந்த அக்கறை பல கேள்விகளை எழுப்பியுள்ளது,” என அந்தக் கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இந்த இடத்தில் அந்தக் கட்டுரையாளர் தம்மை மூன்றாவது நபர் எனக் குறிப்பிடுவதே வழக்கம்.

“சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள்” உட்பட தன்னால் முடிந்த எந்த வழியிலும் பக்காத்தான் ராக்யாட்டுக்கு உதவ சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது என அவாங் செலாமாட் இப்போதைக்கு கூறிக் கொண்டுள்ளார். மற்ற ரகசிய நடவடிக்கைகள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்.

“மலேசிய அரசாங்கத்தின் வீழ்ச்சி அடைந்து டிஏபி ஆதிக்கம் பெற்ற புதிய அரசாங்கம் அதற்குப் பதில் அமைவதைக் காண அவர்கள் கொண்டுள்ள விருப்பத்தைக் காட்டும் அறிகுறிகள் என அவற்றைக் கருத வேண்டும்.”

TAGS: