பிஎன் தலைவர்கள் உதவிசெய்ய இனம் பார்க்கக் கூடாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இனவேற்றுமை பாராட்டாது உதவி செய்திட வேண்டும் என்பதை இன்று நினைவுறுத்தினார்.

பிஎன் தலைவருமான அவர்,  ஒரே ஒரு இனத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் ஆளும் கட்சி இன்று நாட்டை ஆண்டுக்கொண்டிருக்க முடியாது  போயிருக்கும் என்று  கூறினார்.

“கூட்டணி உணர்வுகளையும் கொள்கைகளையும் பின்பற்றும் ஓர் உண்மையான பிஎன் தலைவர், உதவி தேடிவருவோர் என்ன இனம், நிறம் என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்.

“அவர், உதவி தேவைப்படுவோரைத் தேடிச் சென்று உதவுவார்”, என்ற இன்று ஷா ஆலம் சுல்தான் சலாஹுடின் அப்துல் அசீஸ் ஷா போலிடெக்னிக்கில், சிலாங்கூர் பிஎன் மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் பிஎன் தலைவருமான நஜிப்,  பிஎன் தலைவர்கள் தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றார்.

தலைவர்கள்  பதவிகளில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணிக்கக் கூடாது.

“நாம் கட்சிப் பதவிகளிலும் கட்சிப் பேராளர்களாவதிலும்தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.

“இந்தப் பழைமைப்போக்கை கைவிட வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.

TAGS: