ஆப்கான் ஹொட்டல் தாக்குதலில் 15 பொதுமக்கள் பலி

ஆப்ஹானிஸ்தானில் ஒரு ஆடம்பர ஹொட்டலில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த 12 மணிநேர சண்டையில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தலைநகர் காபூலுக்கு அருகே லேக்சைட் ஹொட்டலின் மீது தலிபான்கள் வியாழனன்று பிற்பகலில் தாக்குதலை ஆரம்பித்தனர்.

வெளிநாட்டுக்காரர்களும், பணக்கார ஆப்கானியர்களும் அந்த ஹொடலில் ஒழுக்கக்கேடாக நடப்பதாக அவர்கள் குற்றஞ்சாடுகிறார்கள்.

மதுபானங்களை அருந்தி, கூடாத களியாட்டங்களிலும் அவர்கள் ஈடுபடுவதாகவும் தலிபான்கள் கூறுகிறார்கள்.

தாக்குதலின்போது, அந்த ஹொடலில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பமாக அங்கு தங்கியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இன்று அதிகாலை வெளிச்சம் வந்தவுடன் பாதுகாப்புப் படையினர் அந்த ஹொட்டலில் தமது இறுதி நகர்வை மேற்கொண்டதாக அங்கு இருந்த ஒரு ஆப்கான் செய்தியாளர் கூறினார்.