பிரதமருடைய “வியப்பளிக்கும்” மெர்தேகா தின அறிவிப்புக்களுக்காக அவருக்கு துணைப் பிரதமர் முஹைடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
நஜிப் ரசாக்கின் மெர்தேகா தின உரை துணிச்சலானது, தீரமானது என நிபோங் திபாலில் இன்று மெர்தேகா தினக் கொண்டாட்டங்களின் போது முஹைடின் வருணித்தார். பிரதமரது அறிவிப்புக்கள் “எதிர்பாராதது, தீவிரமானது” என்றார் அவர்.
நஜிப் அறிவிப்புக்கள் வெறும் அரசியல் அறிக்கைகள் என சில தரப்புக்கள் சந்தேகம் தெரிவிப்பதாக துணைப் பிரதமர் சொன்னார்.
“மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அந்த முடிவுகள் அமைந்துள்ளன என்று நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன்”, என அவர் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூறினார். “நமது பல இன குடி மக்களுடைய கோரிக்கைகளுக்கும் மாற்றங்களுக்கு ஏற்பவும் அவை அமைந்துள்ளன.”
என்றாலும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பல இன சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் ஒற்றுமையையும் நிலை நாட்டும் கடப்பாட்டை அரசாங்கம் இன்னும் கொண்டிருப்பதாக முஹைடின் குறிப்பிட்டார்.
“நாங்கள் இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்க மாட்டோம்”, என்றார் அவர்.
நாடு மாற்றம் காணும் போது நாடு எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிப்பதற்கு அரசாங்கமும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“புதிய சிந்தனைகள் நமது தலைமைத்துவத்தின் துணிச்சலைக் காட்டுகின்றன. எங்கள் உருமாற்றத் திட்டங்கள் தொடருகின்றன”, என முஹைடின் வலியுறுத்தினார்.
அவர் பினாங்கிற்கு ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணைப் பிரதமர் தமது வருகையின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு 13 மில்லியன் ரிங்கிட்டையும் வழங்குவார்.