இசி தலைவர்: தேர்தல் பார்வையாளர் நியமனத்தில் எங்களைச் சாடுவது நியாயமல்ல

13வது பொதுத் தேர்தலை ஒட்டி ஐந்து தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பில் இசி என்ற தேர்தல் ஆணையத்தைக் குறைகூறுவது நியாயமற்றது என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார்.

“நாங்கள் நியமிக்க எண்ணியுள்ள பார்வையாளர்கள் வழிகாட்டிகளைத் தயாரிப்பதற்கு எங்களுடன் ஒத்துழைத்து வருகின்றனர். அவை இன்னும் இறுதியாக்கப்படவில்லை.”

“சாத்தியமான அந்த பார்வையாளர்களுக்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பதால் எங்களைக் குறை சொல்வது நியாயமற்றது,” என மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் அப்துல் அஜிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு பார்வையாளர்களாக பணியாற்றுவதற்கு ஐந்து அரசு சாரா அமைப்புக்களுக்கு அங்கீகாரம் கொடுக்க இசி எண்ணியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதல் இசி கடுமையான விமர்சனத்துக்கு இலக்காகி வருகிறது.

Ideas என்ற ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகம், சுயேச்சையான கருத்துக் கணிப்பு மய்யமான மெர்தேக்கா மய்யம், Asli என அழைக்கப்படும் ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம், TI-M என்ற அனைத்துலக மலேசிய வெளிப்படைக் கழகம், Proham என்ற மனித உரிமை மேம்பாட்டுக்கான சங்கம் ஆகியவையே இசி அறிவித்த ஐந்து அமைப்புக்களாகும்

அந்த ஐந்து அரசு சாரா அமைப்புக்களுக்கும் தேர்தல் கண்காணிப்பில் நிறைய அனுபவம் இல்லை. அதே வேளையில் அந்தப் பணியில் தனித்தன்மையுடைய அமைப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.  

வெளிப்படையாக இயங்குவதாக ஒரு மாயத் தோற்றம்

தேர்தல் கண்காணிப்பில் நிறைவான அனுபவத்தைக் கொண்ட அமைப்புக்கள் புறக்கணிக்கப்பட்டு அந்த ஐந்து அமைப்புக்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக Mafrel எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கான மலேசியர்கள் அமைப்புத் தலைவர் சையட் இப்ராஹிம் சையட் நோ கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இயங்குகிறது என்னும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த அது முயலுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Mafrel “பாரபட்சமாகவும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும்” இயங்குவதால் அது தேர்வு செய்யப்படவில்லை என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் அப்துல் அஜிஸ் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

இசி-யின் தேர்தல் பார்வையாளர் திட்டம் வெறும் பொது உறவு நடவடிக்கை என தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே-யும் சாடியுள்ளது.

இசி தேர்வு செய்துள்ள ஐந்து அரசு சாரா அமைப்புக்களுடைய அனுபவம் பற்றியும் கேள்வி எழுப்பிய பெர்சே, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பார்வையாளர்கள் திறமையாக செயல்பட விடாமல் தடுத்து விடும் எனத் தெரிவித்தது.

ஊடகங்களிடம் பேசக் கூடாது, தேர்தல் தொடர்பான அவர்களுடைய கண்டு பிடிப்புக்களை முதலில் இசி ஆய்வு செய்த பின்னரே வெளியிடப்பட வேண்டும். தேர்தல் அதிகாரியின் அனுமதி இல்லாமல் ‘மோசடி’ என தாங்கள் கருதும் நிகழ்வுகளைப் படம் பிடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் அவற்றுள்ள அடங்கும் என பெர்சே குறிப்பிட்டுள்ளது.

 

TAGS: