டிஏபி உடைவதற்காகத்தான் நஜிப் தேர்தலைத் தள்ளிப்போட்டிருக்கிறார்?

அரசியல் ஆய்வாளர் ஒருவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்தலாம் என்று கூறுகிறார். அதற்கான காரணத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.டிஏபி கட்சித் தேர்தல் இவ்வாண்டு டிசம்பரில் நடத்தப்படுவதுதான் காரணமாகும்.

“நஜிப் சாதகமான ஒரு காலத்துக்காகக்  காத்திருந்தார்.இனியும் காத்திருக்க முடியாது.பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததும் கிடைக்கும் வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.அதாவது பொதுத் தேர்தலை நவம்பரில் நடத்தலாம்.

“அதேவேளை, டிஏபி கட்சித் தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்றுகூட அவர் விரும்பலாம்”. இவ்வாறு சிங்கப்பூரின் தென்கிழக்காசிய ஆய்வுக்கழகத்தின்(ஐசீஸ்) துணை இயக்குனர் ஊய் கீ பெங், ஓரியெண்டல் டெய்லியிடம் கூறினார். 

ஒவ்வொரு கட்சித் தேர்தலிலும் உள்பூசல் மூளுவது உண்டு.அதன் விளைவாக பிளவு ஏற்படுவதும் உண்டு.டிஏபி-இல் அப்படி நிகழ்ந்தால் அது நஜிப்புக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறியதாக அந்த சீனமொழி நாளேடு கூறியது.

“அதற்காக டிஏபி டிசம்பரில் அதன் கட்சித் தேர்தலை நடத்தும்வரை, தேர்தலினால் அக்கட்சியில்  பிளவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நஜிப் காத்திருக்க விரும்பலாம்.

“அதுதான் அவருடைய திட்டம் என்றால், 13வது பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் அவர் நடத்துவார்”, என்றவர் விளக்கினார்.

டிஏபி அதன் தேசிய நிலை தேர்தலை டிசம்பர் 15-இல் நடத்தும் என்றும் மாநில அளவில் கட்சித் தேர்தல்கள் அக்டோபரில் நடைபெறும் என்றும் மலேசியாகினி அறிகிறது.

மசீசவின் மிகப் பெரிய எதிரியான டிஏபி பிளவு பட்டால் அது சீன வாக்காளர்களை நஜிப்புக்கு ஆதரவாக திருப்பிவிடக்கூடும்.அது, கடந்த பொதுத் தேர்தல் முடிவைவிட நல்ல முடிவினைப் பெற அவருக்குப் பேருதவியாகவும் இருக்கும்.அம்னோவின் அரசியலில் அவர் நிலைத்திருக்க தேர்தலில் ஒரு நல்ல முடிவைப் பெறுவது மிக மிக முக்கியமாகும்.

2010 கட்சித் தேர்தலில், சிலாங்கூர் டிஏபியில் மாநில அவைத்தலைவர் டெங் சான்ஹ் கிம்(இடம்) தலைமையில் செயல்பட்ட ஓர் அணியும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரேசா கொக் தலைமையில் இன்னோர் அணியும் கடுமையாக முட்டி மோதிக்கொண்டன.

இரண்டு அணிகளின் கடும் தேர்தல் பரப்புரைகளினால் சிலாங்கூர் டிஏபி-இல் அன்று ஏற்பட்ட விரிசல் விரிவடைந்து இன்னும் சீர்செய்யப்படாமலேயே கிடக்கிறது.

ஐசீஸின் இன்னொரு ஆய்வாளரான லீ ஹொக் குவான், ஜோகூரில் 80விழுக்காட்டு சீன வாக்காளர்கள் மாற்றரசுக்கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று கருதுவதாக ஓரியெண்டல் டெய்லி கூறியது.இதனால், மசீச கூடுதல் இடங்களை டிஏபி-இடம் இழக்கும் நிலை ஏற்படலாம்.

ஆனாலும், பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றாரவர். ஜோகூரில் அம்னோவின் பிடியை விலக்குவது எளிதான செயலல்ல.

ஊயும் அதே போன்ற கருத்தைத்தான் வெளியிட்டார்.மாற்றரசுக் கட்சி நகர்புறத்திலும் புறநகர் பகுதிகளிலும் கூடுதல் இடங்களைப் பெறலாம் ஆனால், கிராமப்புறங்களில் அதிக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

“பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சி ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றும் என்று நான் நினைக்கவில்லை.ஆனால், ஜோகூரில் அம்னோவின் நிலை இறங்குமுகமாகத்தான் உள்ளது”, என்றாரவர்.

 

 

TAGS: