557 மெட்ரிக்குலேஷன் இடங்களையும் இந்திய மாணவர்கள் நிரப்ப முடியும் என மஇகா நம்புகிறது

2012/2013 கல்வி ஆண்டுக்கு மெட்ரிக்குலேஷன் வகுப்புக்களுக்காக தகுதி பெற்ற இந்திய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கும் 557 இடங்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என மஇகா நம்பிக்கை கொண்டுள்ளது.

அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள 4,000 இந்திய  மாணவர்களிலிருந்து அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறினார்.

அந்த வகுப்புக்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்களிடமிருந்து கிடைத்த 4,000 மற்ற விண்ணப்பங்கள் இருப்பதால் அந்த 557 இடங்களும் நிரப்பப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்,” என பழனிவேல் பெர்னாமாவிடம் கூறினார்.

அவர் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மய்யத்தில் 2012ம் ஆண்டுக்கான தேசிய இலக்கவியல் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அதனைத் தெரிவித்தார்.

2012/2013 கல்வி ஆண்டுக்கு மெட்ரிக்குலேஷன் வகுப்புக்களில் சேருவதற்கு தகுதி பெற்ற எஸ்பிஎம் தேர்ச்சி பெற்ற 557 மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்கும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நேற்று அறிவித்தார்.

மொத்தம் 1,539 இந்திய மாணவர்களுக்கு ஜுன் 4ம் தேதி தொடங்கிய மெட்ரிக்குலேஷன் வகுப்புக்களில் இடம் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் 943 பேர் மட்டுமே அதனை ஏற்றுக் கொண்டு கல்வி அமைச்சின் மெட்ரிக்குலேஷன் கல்லூரிகளில் பதிவு செய்து கொண்டதாகவும் அவர் சொன்னார். அதனால் இன்னும் 557 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.