“ஊழல், அதிகார அத்துமீறல், சேவகர்களுக்கு உதவுவது” ஆகியவற்றைக் கொண்ட பிஎன்-னின் 55 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு புதிதாக பதிவு செய்து கொண்டுள்ள மூன்று மில்லியன் வாக்காளர்களில் பெரும்பகுதியினர் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் போதும் என டிஏபி நம்புகின்றது.
“அந்த வாக்காளர்களில் 70 விழுக்காட்டினர் (2.1 மில்லியன்) பிஎன்-னுக்கு எதிராக வாக்களித்தால் பக்காத்தானுக்கு 123 நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கும். புத்ராஜெயாவில் அரசாங்கத்தை அமைப்பதற்கு அது போதுமானது,” என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
என்றாலும் தமது மதிப்பீடு 2008ம் ஆண்டு வாக்களிப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டது என்றார் அவர்.
புதிய வாக்காளர்கள் எங்கு உள்ளனர், எங்கு வாக்களிக்கப் போகின்றனர் என்ற விவரங்கள் அவரது கணிப்பில் இடம் பெறவில்லை. விவரமாக இருந்தால் தான் புதிய வாக்காளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா இல்லையா என்பது தெரிய வரும்.
மூன்று மில்லியன் புதிய வாக்காளர்களும் எடுத்துக்காட்டுக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகளுக்கு நட்புறவாக இருக்கும் கூட்டரசுப் பிரதேசத்தில் பதிவு செய்திருந்தால் பெரிய தாக்கம் ஏற்பட வழி இல்லை.
2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிதாக பதிந்து கொண்டுள்ள மூன்று மில்லியன் வாக்காளர்கள் பற்றி லிம் கருத்துரைத்தார். அந்த எண்ணிக்கை தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள 13 மில்லியன் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆவர்.
அந்த புதிய வாக்காளர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
“அடுத்த பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியத்தினால் அவர்களில் பலர் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொண்டுள்ளனர்,” என லிம் கருதுகிறார்.
மகாதீர் முகமட் காலத்தின் பழைய பாணியிலான அரசியலை புதிய தலைமுறையினர் நிராகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் எண்ணுகிறார். 1998 ரிபார்மசி இயக்கமும் அண்மைய பெர்சே தேர்தல் சீர்திருத்த இயக்கமும் அதற்கு சாட்சியங்களாகும்.
கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகியவற்றில் அரசியல் சுனாமி வீசி பிஎன் தோல்வி கண்டதற்கும் நாடாளுமன்றத்தில் அது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததற்கும் மக்களிடையே உருவான எழுச்சியே காரணம் எனவும் லிம் கருதுகிறார்.
அடுத்த பொதுத் தேர்தல்கள் நாட்டின் வரலாற்ரில் மிகவும் கறை படிந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் வாக்காளர் பட்டியலில் ஆவி வாக்காளர்கள் நிறைய இருப்பதாக கூறப்பட்டுள்ளதாலும் புதிய வாக்காளர்களின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் லிம் வாதாடினார்.