அரசியல் வன்முறைகள்: இரு தரப்புக் குழுவை அமைக்க பக்காத்தான் யோசனை

அரசியல் வன்முறைகள் கவலை தரும் வகையில் அதிகரித்து வருவதை சமாளிப்பதற்கு இரு தரப்பு குழுவை அமைக்கலாம் என்று பக்காத்தான் ராக்யாட் யோசனை தெரிவித்துள்ளது.

அரசியல் வன்முறைச் சம்பவங்கள் அண்மைய காலத்தில் ‘அச்சமூட்டும்’ நிலையை எட்டி விட்டதாக டிஏபி தலைவர் ரோனி லியூ கூறினார். வன்முறை மருட்டல்களும் வழக்கமாகி விட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எடுத்துக்காட்டுக்கு பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தூக்கிலிடப்பட வேண்டும் என ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஜிஸ் கேட்டுக் கொண்டதையும் அவருக்குக் கிடைத்த கொலை மருட்டல்களையும் லியூ குறிப்பிட்டார்.

“அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு இரு தரப்பையும் சார்ந்த அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என பல அரசு சாரா அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாங்களும் அதனை ஒப்புக் கொள்கிறோம்,” சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினருமான லியூ நேற்று கூறினார்.

பல்வேறு அரசியல் வன்முறைகள் குறித்து பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்ட போதிலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மெரு சட்டமன்ற உறுப்பினரான அப்துல் ரானி ஒஸ்மான் கூறினார்.

அவற்றுள் கடந்த  ஞாயிற்றுக்கிழமை தெலுக் பாகாங்கில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கை பெர்க்காசா தீவிரவாதி ஒருவர் பின்னுக்கு இருந்த தாக்க முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும் அடங்கும்.

“அந்த சம்பவத்தில் தாக்க முற்பட்டவரை நாங்கள் படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளோம். என்றாலும் அவருக்கு எதிராக இன்னும் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை.”

“முதலமைச்சர் ஒருவரே அவ்வாறு தாக்கப்பட முடியும் என்றால் சாதாரண குடிமக்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்,” என சிலாங்கூர் பாஸ் தலைவருமான ரானி கூறினார்.

கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன

பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வாருடைய லெம்பா பந்தாய் தொகுதியில் செராமா நிகழ்வு ஒன்றின் போது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டது மற்ற நிகழ்வுகளில் அடங்கும்.

கிள்ளானில் டிஏபி-யைச் சேர்ந்த, இரண்டு மலேசிய இந்தியர்கள் குரல் அமைப்பின் தலைவர்கள் தாக்குதலுக்கு இலக்கானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செக்கிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம், 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் சாவா செம்பாடான் பகுதிக்கு தாம் சென்றிருந்த போது 30க்கும் மேற்பட்ட நபர்கள் தம்மைத் தாக்கியதை நினைவு கூர்ந்தார். அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் அவர் மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

தம்மைத் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறிய அவர், தாம் அடையாளம் காட்டுவதற்கு அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வர மறுத்து விட்டதாகச் சொன்னார். அதே வேளையில் அதிகாரிகளும் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமும் கூட விட்டு வைக்கப்படவில்லை. ஜோகூருக்கு அவர் பிப்ரவரி மாதம் சென்ற போது அவரது கார் கண்ணாடியும் மற்ற பகுதிகளும் சேதப்படுத்தப்பட்டன.

அம்னோ உறுப்பினர்களிடையே வன்முறைப் போக்கு கூடி வருகின்றது. அதற்கு மறைமுகமாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் ஆதரவு அளிப்பதாக லியூ கூறிக் கொண்டார்.

“13வது பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி கண்டால் அமைதியான அதிகார மாற்றத்துக்கு பிஎன் அனுமதிக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கக் கூட நஜிப் மறுத்துள்ளார்,” என அவர் வருத்தமுடன் சொன்னார்.

 

TAGS: