பல அரசு சாரா சீன அமைப்புக்கள் இந்த மாத இறுதி வாக்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை அனுப்பும். அந்த அமைப்புக்களில் செல்வாக்கு மிக்க சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோக் ஜோங்-கும் ( ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம்) அடங்கும்.
அந்த மகஜரை வரைவதற்கு பணிக்குழு ஒன்றை எட்டு அரசு சாரா சீன அமைப்புக்கள் அமைத்துள்ளன என்று டோங் ஜோங் தலைவர் யாப் சின் தியான் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
சீனப் பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து நீடிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கும் தேவைகளுக்கு ஏற்ப சீனப் பள்ளிகளை அமைப்பதற்கு அனுமதிக்கும் பொருட்டு முறையாக அரசாங்க நிதிகள் ஒதுக்கப்படுவதற்கும் வழி வகைகளைக் காண அந்த அமைப்புக்கள் விரும்புவதாக அவர் சொன்னார்.
சீனப் பள்ளிக்கூடங்கள் வழங்கும் UEC என்ற ஐக்கிய சீனப் பள்ளித் தேர்வுச் சான்றிதழை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அந்த மகஜர் பரிந்துரை செய்யும் என்றும் யாப் கூறினார்.
இறுதி நகல் தயாராவதற்கு முன்னர் பணிக் குழு மீண்டும் கூடும் என்றும் அந்த மகஜர் பிரதமருக்கும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் யாப் குறிப்பிட்டார்.
Jiao Zong, Hua Zong, மலேசியக் கூட்டு சீன வர்த்தக தொழிலியல் சங்கம் ஆகியவை அதில் சம்பந்தப்பட்டுள்ள அமைப்புக்களில் அடங்கும்.
நஜிப்பும் மகாதீரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல
இதனிடையே அந்தக் கோரிக்கை மகஜர் மீது வரலாறு திரும்பும் எனக் கூறப்படுவதை டோங் ஜோங் துணைத் தலைவர் சாவ் சியூ ஹோன் நிராகரித்தார்.
1999ம் ஆண்டு அரசு சாரா சீன அமைப்புக்கள் Suqiu என்னும் கூட்டணி வழியாக ( மலேசிய சீன அமைப்புக்களின் தேர்தல் முறையீட்டுக் குழு) முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்திடம் 17 அம்ச மகஜர் ஒன்றை சமர்பித்தன.
அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் Suqiu-வை சாடினார். அதன் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் கம்யூனிஸ்ட்கள் செய்ததைப் போன்றும் பயங்கரவாத அமைப்பான அல் மாவ்னாவைப் போன்றும் இருப்பதாக மகாதீர் சொன்னார்.
மலாய்க்காரர்களின் சிறப்பு நிலையை அகற்றுவதற்கு Suqiu விரும்புவதாகவும் கூட மகாதீர் கூறிக் கொண்டார். மலேசியாவில் பல்வேறு இனங்களுக்கு இடையில் நல்ல உறவுகளை மேம்படுத்தும் அரசாங்க முயற்சிகளை Suqiu சீரழித்து விடும் என்றும் அவர் சொன்னார்.
“நஜிப்பும் மகாதீரும் மாறுபட்டவர்கள். நஜிப் திறந்த மனதைக் கொண்டுள்ளார். அவர் பிரதமராக இருந்துள்ள மூன்று ஆண்டு காலாத்தில் ஒரே மலேசியாக் கோட்பாடு உட்பட சில தாராளமயக் கொள்கைகளை பின்பற்றத் தொடங்கியுள்ளார்,” என்றார் சாவ்.