தேர்தல் ஆணையம்(இசி), வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மூன்று-மாத கால அவகாசம் அளிக்கப்பட்டும்கூட எதுவும் செய்யப்படவில்லை என மைஓவர்சீஸ் வோட்(எம்ஓவி) வருத்தம் கொள்கிறது.
வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமைகளுக்கு நாடாளுமன்ற ஆதரவுதேடுவதற்காக உருவாக்கி இருக்கும் ஓர் அமைப்புத்தான் எம்ஓவி.இப்போதைக்கு வெளிநாட்டில் உள்ள அரசு ஊழியர்களும் முழு-நேர மாணவர்களும் மட்டுமே அஞ்சல்வழி வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள்.
தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி),ஏப்ரல் 3-இல், நாடளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வெளிநாடுவாழ் மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிக்க வகைசெய்யும் வழிமுறை ஒன்றை உருவாக்குவது பற்றி இசி ஆராய வேண்டும் என்று பரிந்துரைத்தது.
அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசுதுதுறைகளுடன் கலந்து ஆலோசித்து தேவையான விதிமுறைகளை உருவாக்க இசி-க்கு மூன்று மாதகாலம் அவகாசம் வழங்கப்பட்டது.
“அந்தக் கெடு ஜூலை 3-உடன் முடிந்துவிட்டது.இசி எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. மே மாதம் இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்-கூட அண்மைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்(ஜூன்11-ஜூன்28)தேர்தல் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்ய எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.ஆனால் எதுவும் நடக்கவில்லை”, என்று அந்த அமைப்பு நேற்று லண்டனில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.
“2011 ஆகஸ்டில், ஜூலை 9 பெர்சே 2.0 பேரணிக்குப் பின்னர், இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க இசி முன்வந்திருப்பதாக அறிவித்து கிட்டதட்ட ஓராண்டு கடந்து விட்டது.
“அப்போதிருந்தே இசி அதனைச் செய்யாதிருப்பதற்கு பல சாக்குபோக்குகளைச் சொல்லி வந்துள்ளது”.
இப்போது ,13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அச்சீரமைப்பு செய்யப்படும் வாய்ப்பு இல்லை என்ற எண்ணம்தான் மேலோங்கியுள்ளது.
இவ்விசயத்தில் இசி செயல்படாமலிருப்பதையும் வெளிநாட்டில் வசிக்கும் மலேசிய குடிமக்களின் வாக்களிக்கும் உரிமைகளைக் கட்டுப்படுத்த முனைவதையும் கண்டு மலேசியர்கள் எரிச்சல் அடைந்திருப்பதாக எமஓவி குறிப்பிட்டது.
பிஎஸ்சியும் மக்களவையும் நிர்ணயித்த மூன்று-மாத அவகாசத்தில் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யத் தவறியது ஏன் என்பதை அப்துல் அசீஸ் விளக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்தது.