அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட அதிகார அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கடந்த வெள்ளிக் கிழமை போலீஸில் புகார் செய்துள்ள போதிலும் அந்த விவகாரத்தை போலீசார் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த விவகாரத்தை விசாரிப்பதில் எம்ஏசிசி-யுடன் ஒப்பிடும் போது வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக ராபிஸி தெரிவித்துள்ள போதிலும் அந்தத் தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்ட தினத்தன்று எம்ஏசிசி அதிகாரிகள் அவரைக் காணச் சென்றுள்ளனர்.
ராபிஸி புகாரைத் தொடர்ந்து வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதனை விசாரிக்கிறதா என வினவப்பட்ட போது அந்தப் பிரிவின் இயக்குநர் சையட் இஸ்மாயில் சௌயட் அஜிஸான் சுருக்கமாகப் பதில் அளித்தார்:
“அந்த விவகாரம் எம்ஏசிசி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என மலேசியாகினிக்கு குறுஞ்செய்தி வழி அனுப்பியுள்ள பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் இனிமேல் அதனை விசாரிப்பதை நிறுத்திக் கொள்வர் என்பது அதன் அர்த்தமா என அவரிடம் தொடர்ந்து வினவப்பட்டது. அதற்கு சையட் இஸ்மாயில் பதில் அளிக்கவே இல்லை.
தொடக்கத்தில் Balfour Beatty-Invensys Consortium (Balfour) என்னும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஒரு பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள அந்த அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்தில் நஜிப் தலையிட்டதாக ராபிஸி கூறிக் கொண்டுள்ளார்.
ராபிஸி வெளியிட்ட என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட விவகாரத்தைப் போன்று அந்த விவகாரத்தை போலீஸும் எம்ஏசிசி-யும் விசாரித்தன.
அந்தக் குத்தகை வழங்கப்படுவது தொடர்பில் எந்த தவறும் நிகழவில்லை என கடந்த வெள்ளிக் கிழமை அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நஜிப் கூறினார்.
“முறைகேடாக ஏதும் நிகழவில்லை,” என்றார் அவர்.
எம்ஏசிசி அதிகாரிகள் குழு ஒன்று, பிகேஆர் தலைவர் அந்த விவகாரத்தை எழுப்பிய ஜுன் 27ம் தேதியன்று ராபிஸியைச் சந்தித்ததுடன் Syarikat Prasarana Negara Bhdக்கும் வருகை அளித்தது.
அது ‘உண்மை நிலை அறியும் வருகை’ என Prasaranaவின் ஊடக விவகார நிர்வாகி வருணித்தார்.