“யார் சொன்னது பினாங்கில் அடக்கவிலையில் வீடுகள் இல்லை என்று?”

பினாங்கில் அடக்கவிலை வீடுகள் குறைவு என்று கூறப்படுவதை மறுத்த மாநில அரசு, ஜார்ஜ்டவுன் நடுவே ஜாலான் எஸ்.பி.செல்லையா ஓரத்தில், குறைந்த விலை, நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகள்(எல்எம்சி) கட்டப்படுவதாக அறிவித்துள்ளது.

அதற்காக, பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி)த்துக்குச் சொந்தமான 7.2ஏக்கர் நிலத்தை மாநில மேம்பாட்டு அமைப்பான பினாங்கு மேம்பாட்டுக் கார்பரேசனிடம் வழங்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக கொம்டார் சட்டமன்ற உறுப்பினர் இங் வை ஏய்க் கூறினார்.

அதில், 20இலிருந்து 25 அடுக்குகளைக்கொண்ட நான்கு கட்டிடங்கள் கட்டப்படும்.அவை மொத்தம் 1,320வீடுகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

“பினாங்கு தீவில் அடக்கமான விலையில் தரமான வீடுகளைக் கட்டித்தர அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று”, என இங் கூறினார்.

முதலமைச்சர் ஏழைகளின் நிலத்தை விற்றார் என்கிறது பிஎன்

பினாங்கு மாநில பிஎன் இளைஞர் தலைவர் ஹோ தோங் கியோங், முதலமைச்சர்  லிம் குவான் எங் “ஏழைகளுக்குச் சொந்தமான நிலத்தை வணிகர்களிடம் விற்றுவிட்டார்” என்று குற்றம் சாட்டியதை அடுத்து பினாங்கு தீவில் அடக்கவிலை வீடுகள் விவகாரம் பற்றி நிறைய  பேசப்படுகிறது. 

ஹோ, ஜாலான் பர்மாவுக்கு அப்பால் தாமான் மங்கிஸில் பொது வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 0.45ஹெக்டர் நிலம் விற்கப்பட்டது பற்றித்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 1.86ஹெக்டரில் 320வீடுகள் 2005-இல் கட்டி முடிக்கப்பட்டன.

அத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு ஒப்புதல் கொடுக்கவில்லை என்று ஹோ கூறியதை மாநில வீடமைப்புக்குழுத் தலைவர் வொங் ஹொன் வாய் மறுத்தார்.

பின்னர், அந்நிலம் மருத்துவ மையம் கட்டுவதற்கு தனியார் மேம்பாட்டாளர் ஒருவருக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது.அதே நேரத்தில், ஜாலான் எஸ்.பி.செல்லையாவில் 2.8ஹெக்டர் நிலமொன்று எல்எம்சி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது.

முதலமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளருமான இங், அந்த இடத்தில், எம்பிபிபி குடியிருப்புகள் இருக்கின்றன என்றும் அவை இடமாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அங்கு எட்டு குட்டிக் கோயில்களும் இருக்கின்றன.அவற்றை அந்த வட்டாரத்திலேயே வேறு இடங்களுக்கு மாற்ற சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

“பிஎன் பொது வீடமைப்பு வசதிகள் பற்றித் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது”, என்றாரவர்.

இதனிடையே, வீடமைப்பு, திட்டமிடல் வாரியத்துக்குத் தலைமைதாங்கும் எம்பிபிபி கவுன்சிலரான பிலிக்ஸ் ஊய்,2008-இல் பக்காத்தான் பினாங்கில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எம்பிபிபி குறைந்த, நடுத்தரவிலை வீடுகள் கட்டுவதற்கான இடங்களை அடையாளம் கண்டு வந்திருப்பதாகக் கூறினார்.

அடக்கவிலை வீடுகள் கட்டுவதற்காக பாடாங் தேம்பாக்கில் ஏழு ஏக்கர் நிலமும் ஜாலான் பேராக்குக்கு அப்பால் மூன்று ஏக்கரும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

வீடமைப்புத் திட்டங்களுக்காக எம்பிபிபி தேவையான நிலத்தை வழங்கி மாநில அரசுடன் ஒத்துழைத்து வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பினாங்கில் குறைந்த விலை வீட்டின் விலை ரிம72,000. நடுத்தர விலை வீடுகள் ரிம220,000வரையிலும் விலை போகின்றன.

 

 

TAGS: