பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதேன் எனக் கூறி 50 அரசுசார அமைப்புகளை உள்ளடக்கிய WargaAMAN இயக்கத்தின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் 12. 30 மணி அளவில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு முன்பு ஒன்றுகூடி ஆட்சேபனை தெரிவித்தனர். [காணாளி]
தம்முடைய உயிருக்கு மிரட்டல் ஏற்பட்டிருப்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை மின்னஞ்சல் ஒன்று தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசன் கடந்த இரு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
‘கவனம்! கூலி கொலையாளிகள் உங்களைக் கொல்வதற்கு புறப்பட்டுவிட்டனர்’ என்று கூறும் அந்த எச்சரிக்கை மின்னஞ்சல் கடந்த 30-ஆம் தேதி அம்பிகா சீனிவாசனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த எச்சரிக்கையானது ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மலேசியர்களுக்கும் விடுக்கப்பட்ட மருட்டலாக கருதப்படுகிறது.
பெர்சே பேரணி 2.0 மற்றும் பேரணி 3.0-க்கு பின்னர் அம்பிகா அவர்களுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டு வரும் கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து காவல்துறையினர் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் காவல்துறையினர் பக்கசார்பான முறையில் நடந்து கொள்ளவதாக இன்று காவல்துறை தலைமையகத்திற்கு முன் நடைபெற்ற ஆட்சேபனை கூட்டத்தின் போது இந்திய அரசு சார அமைப்புகளின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், அம்பிகா சீனிவாசன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் ஆபத்து குறித்து பக்கச்சார்பற்ற முறையில் காவல்துறையினர் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் கோசங்களை எழுப்பியவாறு வலியுறுத்தினர்.
50 அரசு சார அமைப்புகளை உள்ளடக்கிய WargaAMAN இயக்கத்தின் தலைமையில் சுமார் 30 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த ஆட்சேபனைக் கூட்டத்தில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மா. மனோகரன், செனட்டர் இராமகிருஷ்னன் மற்றும் WargaAMAN இயக்க பிரதிநிதிகளான பாரதிதாசன், இராஜரத்தினம், சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைவர் எல். சேகரன் ஆகியோருடன் இதர அரசு சார அமைப்பு பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அம்பிகா கொலை மிரட்டலைப் பெறுவது இது இரண்டாவது தடவையாகும். கடந்த ஆண்டு குறுஞ்செய்தி வழியாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்சே இயக்கத்தில் சம்பந்தப்பட்ட மற்ற தலைவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை; ஆனால், அம்பிகா சீனிவாசன் மீது மட்டுமே இந்த அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருவதால், இதுவோர் இனவாதத்திற்குரியது என்று நம்பப்படுகிறது.