“நான் சொய் லெக் அல்ல” என்கிறார் லிம்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முன்னாள் ஊழியர் ஒருவரை லிம்-மின் மனைவி பெட்டி சியூ தாக்கியதாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் மீது தமது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

ஒருவருடைய நடத்தைக்கு களங்கம் கற்பிக்கும் பிஎன், மசீச நடவடிக்கைகளின் விளைவே அந்தக் குற்றச்சாட்டு என லிம் சொன்னார். தமக்குத் தொடர்புகள் இருந்ததாகக் கூறப்படுவதை மறுத்த லிம் தமது மனைவி யாரையும் தாக்கவில்லை என்றார்.

“மசீச பொய் சொல்வதை நானும் என் மனைவியும் நீதிமன்றத்தில் நிரூபிக்க அனுமதியுங்கள். லிம் குவான் எங், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் போன்றவரல்ல,” என லிம் கூறினார்.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாம் திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்திருந்ததை சுவா ஒப்புக் கொண்டதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமையன்று மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தில் டுயோங் தொகுதி உறுப்பினர் கான் தியான் லூ தெரிவித்த அந்தக் குற்றச்சாட்டு பற்றிக் கருத்துரைத்த லிம், அது சட்டமன்றம் வழங்கியுள்ள விதி விலக்கைத் தவறாகப் பயன்படுத்துதற்கு ஒப்பாகும் என்றார்.

மாநிலச் சட்டமன்றத்துக்கு வெளியில் அந்தக் குற்றச்சாட்டை திரும்பச் சொல்லுமாறு மலாக்கா மாநில மசீச தலைவருமான கான்-க்கு லிம் சவால் விடுத்தார். அப்போதுதான் அவருக்கு எதிராக அவதூறுக்காக சட்ட நடவடிக்கையை தாமும் தமது மனைவியும் தொடுக்க முடியும் என்றார் அவர்.

“கான் மலாக்கா மாநிலச் சட்டமன்றம் வழங்கியுள்ள சலுகைகளையும் விதி விலக்குகளையும் தவறாகப் பயன்படுத்தி எனக்கும் என் மனைவிக்கும் எதிராக தனிப்பட்ட தார்மீக விவகாரம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார்”, என லிம் கூறினார்.

அவர் இன்று பினாங்கில் நிருபர்கள் சந்திப்பில் முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கையை வாசித்தார்.

 

TAGS: