மலாக்கா சட்டமன்றம் ஐந்து டிஏபி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது

மலாக்கா மாநிலச் சட்டமன்றம் ஐந்து டிஏபி உறுப்பினர்களை நடைமுறை விதிகளை மீறியதற்காகவும் குழப்பத்தை விளைவித்ததற்காகவும் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.

கோத்தா லக்ஸ்மணா உறுப்பினர் பெட்டி சியூ ஜெக் செங், கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் கோ லியோங் சான், ஆயர் கெரோ உறுப்பினர் கூ போய் தியோங், பண்டார் ஹிலிர் உறுப்பினர் தே கோக் கியூ, பாச்சாங் உறுப்பினர் லிம் ஜாக் வோங் ஆகியோரே அந்த ஐவரும் ஆவர். அவர்களுடைய இடை நீக்கம் இன்று தொடக்கம் அமலுக்கு வருகின்றது.

மாநிலச் சட்டமன்றக் கூட்டம் தொடங்கிய பின்னர், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் மனைவியுமான பெட்டி சியூ, டுயோங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிமன்ற உறுப்பினருமான கான் தியான் லூ, திங்கட்கிழமையன்று தம்மைச் சம்பந்தப்படுத்தி தெரிவித்தது என தாம் வருணித்த தனிப்பட்ட கருத்துக்களை மீட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரிய பின்னர் குழப்பம் மூண்டது.

தமது கணவருடன் கான் தொடர்புபடுத்திய மாது ஒருவருடைய பிரச்னை மீது கான் அந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக அவர் கூறிக் கொண்டார்.

“திங்கட்கிழமையன்று சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கான் அவதூறு கூறியிருப்பதாகவும் எனக்கும் என் கணவருக்கு எதிராகவும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டியுள்ளதாகவும்  நான் கருதுகிறேன்.”

“அந்தக் குற்றச்சாட்டை அவர் மீட்டுக் கொள்ள வேண்டும் என நான் கோருகிறேன்,” என பெட்டி சியூ சொன்னார்.

பெர்னாமா

 

TAGS: