கமுந்திங் முகாமில் மலேசியாகினிக்கு தடை

கமுந்திங் தடுப்புமுகாம் பணியாளர்கள் மலேசியாகினி கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடாது என்று பணிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரவில் இணைய செய்தித்தளத்தின் பெயர் தனித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக முகாமின் பணியாளர்களில் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

“முகாமின் நிர்வாகம் அவ்வாறு கட்டளை பிறப்பித்துள்ளது.மற்ற(செய்தி நிறுவனங்களின்) செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை”, என்றாரவர்.

கமுந்திங் முகாமில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பட்சுலா அப்துல் ரசாக், இரண்டு வாரங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.அது பற்றித் தகவல் அறியத்தான் மலேசியாகினி முகாமின் இயக்குனர் ரோஸ்லன் ரம்லியுடன் தொடர்புகொள்ள முயன்றது.