இந்திய தூதரகம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது பற்றித் தகவல் அளிக்குமாறு மலேசிய அரசாங்கத்திடம் எழுதிக் கேட்டிருக்கிறது.
“காவலில் உள்ளவர்கள் உள்பட, இந்திய குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் கூடுதல் தகவல் கேட்டு இந்திய தூதரகம் மலேசிய அரசாங்கத்துக்கு எழுதியுள்ளது”, என மலேசியாகினியின் மின்னஞ்சலுக்கு அத்தூதரகம் பதில் அளித்திருந்தது.
மலேசிய அரசங்கத்திடமிருந்து பதில் கிடைக்கும்வரை இவ்விவகாரத்தில் தூதரால் கருத்துரைக்க இயலாது என்றது குறிப்பிட்டது.
எப்போது மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டார்கள் என்பதை அது தெரிவிக்கவில்லை. அது “உள்விவகாரம்” என்று கூறிவிட்டது.
கமுந்திங் முகாமில் ஜூன் 26-இல் உண்ணாவிரதம் இருந்த ஏழு ஐஎஸ்ஏ கைதிகளில் ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என ஐஎஸ்ஏ-எதிர்ப்பு இயக்கம் (ஜிஎம்ஐ) கூறியிருந்தது.
அதிகாரத்துவ தரவுகளின்படி ஐஎஸ்ஏ-இன்கீழ் இரண்டு இந்திய குடிமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அவர்கள், ஜூன் 21-இல் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய மலேசிய கைதிகளான பட்சுலா அப்துல் ரசாக், ரசாலி கசான் ஆகியோருடன் சேர்ந்து கொண்டார்கள்.ரசாகி கசான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து கடந்த வாரம் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
இந்தோனேசிய கைதிகளை விடுவிக்க இந்தோனேசியா கோரிக்கை
இதனிடையே, இந்தோனேசிய தூதரகமும்,ஐஎஸ்ஏ கைதிகளாக உள்ள இந்தோனேசியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது.
“எங்கள் நாட்டுக் கைதிகளை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்”, என்று தூதரகப் பேச்சாளர் சூர்யானா சாஸ்ட்ராடிரெட்ஜா கூறினார்.
“அவர்களை விடுவித்து இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்”. ‘
ஆனால், அவர்கள் முஸ்தவான் அஹ்பாப் போல் நிரந்தர வசிப்பிட(பிஆர்)த் தகுதி பெற்றவர்களாக இருந்தால் பிரச்னைதான்.
“அவரின் பிஆர் தகுதியை மீட்டுக்கொள்வதா வேண்டாமா என்பதை மலேசிய அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும்.பிஆர் தகுதியை மீட்டுக்கொள்ளும் பட்சத்தில் அவரைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும்”, என்று சூர்யானா கூறினார்.
கமுந்திங் முகாமில் ஏழு இந்தோனேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.