-பொ. வேதமூர்த்தி, தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 5, 2012.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்களை அவர்களின் தாய், தந்தை, அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்ற அவர்களின் உறவுகளிடமிருந்து ஈவு, இறக்கம் இன்றி வேரோடு பிடுங்கி, ஓடித்திரிந்த வீதிகள், நீந்தி மகிழ்ந்த நீரோடைகள், வணங்கி பணிந்த குல தெய்வ ஆலயங்கள் போன்ற இரம்மியமான சூழல்களில் இருந்தும் பிரித்து, கொடுமையான காட்டு மிருகங்களும், மலைப்பாம்புகளும் நிறைந்த உயிரை உறையவைக்கும் அடர்ந்த காடுகளைக் கொண்ட மலாயாவிற்கு கப்பலில் ஏற்றி வந்தார்கள்.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளைகாரர்கள் காபி, கரும்பு, தேயிலை, மிளகு, போன்ற பொருள்களின் அபரிமிதமான தேவைகளை சாதகமாக பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் 1900 ஆண்டு முதல் ரப்பருக்கான தேவையும் வெகு அதிகமாக உயர்ந்தது. இந்தப் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து இன்னும் அதிக இலாபத்தை அடைய ஆட்கள் தேவைப் பட்டார்கள். இந்த தேவையைப் பூர்த்தி செய்யவே நம் முன்னோர்களை பல ஆசை வார்த்தைகளைக் கூறி இங்கு கொண்டு வந்தனர்.
மலாயா காடுகளை அழித்து மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது உயிர் துறந்த ஆயிரமாயிரம் நமது இன பாட்டாளிகள் இன்றும் இந்நாட்டு மண்ணில் எங்கோ ஒரு மூலையில், அடையாளமிடப்படாத சவக்குழிகளில் புதைந்து கிடக்கிறார்கள் என்பது அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்கள் உழைப்பில் ஆங்கிலேயரின் பணத் தொந்தி நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டே போனதே தவிர, உழைத்து உழைத்து கூனிக் குறுகி ஓடாய்ப்போன 4 மற்றும் 5 ஆம் தலைமுரையாகிவிட்ட இந்த ஒப்பந்தத் தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு சொந்தமாக வீடு கூட இருந்ததில்லை. நிலம் வாங்குவதென்பதோ மண்ணின் மைந்தர்கள் என்ற மலாய்க்காரர்களின் சிறப்புரிமை என்று பாகுபடுத்தி விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
வேறு வழியில்லை. உழைத்தார்கள்… உழைத்தார்கள்… உழைத்தார்கள்… இந்நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை உழைத்தார்கள். மழைத் துளிகளுக்கு அடுத்து இந்த மலை நாட்டு மண்ணை அதிகம் நனைத்தது இவர்களின் வியர்வைத் துளிகள்தான்!
இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நாம்தானே மலாயாவிற்கு கொண்டு வந்தோம். நம்மை நம்பித்தானே இவர்கள் 200 ஆண்டுகளாக உழைத்தார்கள். இப்போது இவர்களுக்கென்று எதுவுமே செய்யமால் அம்போவென நட்டாற்றில் விட்டு செல்கிறோமே. ஏழைகளான, அரசியல் செல்வாக்கில்லாத, படிப்பறிவில்லாத இந்த பாமரர்கள் மற்ற பெரும்பான்மை சமூகத்தினரோடு போட்டி போடும் திறனற்ற நிலையில் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் சென்றுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
மேலும், சட்ட சாசனத்தில் இன ரீதியாக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்தி, இந்தியர்களை தொடர்ந்து காலனித்துவ அடிமைச் சிறையில் உழலும்படி செய்து விட்டு சென்றுவிட்டார்கள்.
எத்தகையப் பாதுகாப்புமில்லாமல் தோட்டங்களையே நம்பி தனித்து நின்ற ஒப்பந்த தொழிலாளர்களின் வாரிசுகளை நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரால் நாய்களை விரட்டி அடிப்பதைப் போல் துரத்தியபோது வெள்ளையர்கள் நமக்கிழைத்த துரோகச் செயல் அதன் கொடூரத் தன்மையை வெளிப்படுத்தத் துவங்கியது.
தங்குவதற்கு வீடு இல்லை, படிப்பும் இல்லை, பணமும் இல்லை, பாலுக்கு அழும் சிசுவுக்கு பால் வாங்க வழியில்லை, கொதிக்கும் உலைக்கு அரிசி இல்லை, கைகொடுக்க நாதியுமில்லை, உரிமைக்கு குரல் கொடுக்க எவனுமில்லை, உளியேந்திய கைகளுக்கு மாற்று கைத்தொழிலும் இல்லை. சுருட்டி கட்டிய பெட்டி படுக்கைகளோடு தோட்டத்தின் முச்சந்தியில் கண்ணீரோடு நின்றான் 200 ஆண்டுகளாய் உழைத்த தமிழன்! நம்மை இந்நாட்டிற்கு கொண்டு வந்த ஆங்கிலேயன் நமக்கு விட்டுச் சென்ற உரிமை இதுதான்.
அந்த தோட்டத்து முச்சந்தியில் நின்ற தமிழனுக்கு அன்றுதான் புரிந்தது இந்நாட்டில் கல்வியில், வியாபார திட்டங்களில், வேலை வாய்ப்புகளில் அவனுக்கான சம உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலேயனின் சதிச் செயல். இந்நாட்டில் நாம் என்றென்றும் அடிபணிந்து மட்டுமே வாழ வகை செய்த ஆங்கிலேயனின் சூதுதான் இன்று நாம் இந்நாட்டில் அனுபவிக்கும் அவலங்கள்.
அடியேன் வறுமையில் உழலும் பிற்படுத்தப்பட்ட ஏழை இந்தியர்களுக்காக மட்டுமே இந்த வழக்கை பதிவு செய்கிறேன்.
தங்களின் இயலாமையைத் தனிமையில் கண்ணீரில் கரைத்தவர்களுக்காக, தங்களின் உரிமைக்குரல் ஆதிக்கத்தில் உள்ளவர்களின் செவிகளுக்கு எட்டாத ஏமாற்றத்தால் துவண்டு போனவர்களுக்காக, ஆட்சி மற்றும் பண பலத்திற்கு முன் தங்களைத் தற்காத்துகொள்ள முடியாதவர்களுக்காக இந்த வழக்கைப் பதிவு செய்கிறேன்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏமாற்றப்பட்டு மலாயாவிற்கு கொண்டுவரப்பட்ட நமது ஆயிரமாயிரம் முப்பாட்டனார்களுக்கும், கடல் பயணத்தின் போது மரணமடைந்தவர்களுக்கும், கை நிறைய சம்பளம் என நம்பி கடும் உழைப்புக்கு ஆளாக்கப்பட்டு நசுக்கப்பட்டவர்களுக்கும், மலாயா காடுகளை அழிக்கும் போதும், சாலைகள், இரயில் தண்டவாளங்கள் அமைத்த போதும், அரசாங்க கட்டிடங்களை கட்டும் போதும் தங்களின் புது நாடான மலாயாவில் உயிர் துறந்து, இந்த மண்ணின் மடியில் அடையாளமிடப்படாத சவக்குழிகளில் மீளாத் துயிலில் ஆழ்ந்திருக்கும், நமக்கு அறிமுகமான மற்றும் அறிமுகமில்லாத நம் முப்பாட்டனார்களின் பொன்னடிகளை வணங்கி அவர்களின் பொற்ப்பாதங்களுக்கு இவ்வழக்கை சமர்ப்பணம் செய்கிறேன்!