“ஜப்பானில், புகுஷிமா அணு சக்தி நிலைய விபத்துக்கு, சுனாமி காரணமல்ல, மனித தவறுகள் தான் காரணம்” என, அந்நாட்டு நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுனாமி ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இதன்போது புகுஷிமா அணு சக்தி நிலையத்தின் அணு உலைகள் சேதமடைந்து, கதிர்வீச்சு ஏற்பட்டதால் இந்த அணு சக்தி நிலையம் மூடப்பட்டது.
இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு, தற்போது தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
“சுனாமியால் இந்த அணு சக்தி உலைகள் சேதமடைந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், நிர்வாகிகளும் உடனடியாக செயல்படாத காரணத்தால் தான், கதிர்வீச்சு அளவுக்கு நிலைமை சென்றது. எனவே, இதற்கு முழுக்க முழுக்க மனித தவறுகள் தான் காரணம்” என, நாடாளுமன்ற குழு, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.