நஜிப்: பக்காத்தானின் மூன்று தீய போதனைகள்

மாற்றரசுக் கட்சிகள் மக்களுக்கு தீயனவற்றை-சமயத்துக்குப் புறம்பானவற்றைக்கூட கற்றுத்தர முனைவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

அவற்றுள் மூன்று,விசயங்கள் தெளிவாக தெரிபவை என்றாரவர்.கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்கிறார்கள், நற்செயல்களை மறந்திடலாம் என்கிறார்கள்,வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள்.

“கடந்த பொதுத் தேர்தலின்போது(மாற்றரசுக் கட்சிகள்) பல வாக்குறுதிகளை அளித்தார்கள்.(சில மாநிலங்களில் ஆட்சிக்கு வந்ததும்) ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை”, என்றவர் சொன்னார். நஜிப்,தம்முடைய பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் 45 அரசுசார்பற்ற அமைப்புகளுக்கு உடைகளையும் மீனவர்களுக்கு படகு இயந்திரங்களையும் அய்டில்பித்ரி அன்பளிப்புகளாக வழங்கிய நிகழ்வில் பேசினார்.

பாரிசான் நேசனல் அரசாங்கத்தைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியது என்பதுடன் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்படாத உதவிகளைக் கூட செய்தது என்று நஜிப் குறிப்பிட்டார்.

இஸ்லாம், கடன்களைக் கட்டித் தீர்க்க வேண்டும், ஒருவர் இறந்தபின்னர் அவர் கடன் பட்டிருந்தால் அவரின் உறவினர்கள் அவற்றைத் தீர்க்க வேண்டும் என்கிறது என்றவர் குறிப்பிட்டார்.

மாற்றரசுக்கட்சிகள் தேசிய உயர்கல்விக் கடன் கழகம்(பிடிபிடிஎன்) வழங்கிய கடன்களை ரத்துச் செய்வதாகக் கூறிவருவதைக் கருத்தில்கொண்டுதான் பிரதமர் கடன்கள் பற்றிக் குறிப்பிட்டார் என்பது தெளிவு.

அரசாங்கம் செய்துவரும் நல்ல காரியங்களை மதிக்க வேண்டியதில்லை என்று கூறி மாற்றரசுக் கட்சிகள் மக்களின் சிந்தையில் நஞ்சூட்டி வருவதாகவும் அவர் சாடினார்.

“நற்செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி வருகிறார்கள்.வேறு எந்த நாடும் மக்களுக்கு கொசுவலைகள், பொய்ப்பற்கள்,மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றைக் கொடுப்பதாக எனக்குத் தெரியவில்லை”.

நேர்மையும் தொலைநோக்கும் கொண்ட தேசிய தலைவர்கள் இன்றி நாடு இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது என்றாரவர்.

-பெர்னாமா

TAGS: