அம்னோவின் இன்னொரு நிலக்கொள்முதல் முறைகேடு, டிஏபி அம்பலம்

செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம், சிலாங்கூர் தஞ்சோங் காராங் அம்னோ டிவிசன் சம்பந்தப்பட்ட இன்னொரு நிலக்கொள்முதலிலும்  முறைகேடு நிகழ்ந்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார.2001-இல் அந்தத் தொகுதி வாங்கிய 1.2ஹெக்டர் நிலத்துக்கு ரிம3.17மில்லியன் கழிவு வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

குறிப்பிட்ட அந்த நிலத்தின் மதிப்பு  ரிம3.3மில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அந்த அம்னோ டிவிசன் முந்தைய பிஎன் நிர்வாகத்தில்  ரிம130,244-க்குத்தான் அதை வாங்கியுள்ளது.

ஜாலான் சுங்கை காஜாங்குக்கு அப்பால் உள்ள அந்த அரசு நிலத்தை வாங்க தஞ்சோங் காராங் அம்னோ டிவிசன் 2001, மார்ச் 31-இல் விண்ணப்பம் செய்தது.

அதனைத் தனது பொருளாதார நடவடிக்கை மன்றத்தின்வழி ஏற்றுக்கொண்ட சிலாங்கூர் அரசு,அதற்கான விலையைச் சந்தை நிலவரப்படி ரிம3.3மில்லியன் என்று நிர்ணயித்தது.

அந்த அம்னோ டிவிசன், விலையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள மாநில அரசும் அதற்கும் ஒப்புக்கொண்டது.

“முடிவில் அந்த நிலத்துக்கான விலை ஒரு சதுர அடிக்கு ரிம1 என்று குறைக்கப்பட்டு அந்த அம்னோ டிவிசன் ரிம130,244 மட்டுமே கொடுத்து அதை வாங்கியது”, என இங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

நிலத்துக்கு உரிய விலையை அம்னோ கொடுக்க வேண்டும்

நடப்பு தஞ்சோங் காராங் அம்னோ டிவிசன் தலைவரும் விவசாய அமைச்சருமான நோ ஒமார் இந்த நிலக் கொள்முதல் பற்றி விளக்க வேண்டும் என இங் வலியுறுத்தினார்.

“மக்களில் பெரும்பாலோருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு ஒரு துண்டு நிலம்கூட கிடைக்காதபோது இவர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட சலுகைகள் கிடைப்பது எப்படி என்பதை அவர்கள் விளக்க வேண்டும்”, என்றாரவர்.

அம்னோ வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதாகக் கூறிக்கொள்வது உண்மையானால் நிலத்துக்கு உரிய விலையைக் கொடுத்திட வேண்டும் என்றாரவர்.

“கொடுக்க முடியாவிட்டால், நிலத்தை மாநில அரசிடமே ஒப்படைக்க வேண்டும்”.

அந்நிலத்தில் அந்த அம்னோ டிவிசனும் பூமி உத்தாமா கட்டுமான நிறுவனமும் கூட்டாக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

வாரத் தொடக்கத்தில், இங், அதே அம்னோ டிவிசன், ரிம1மில்லியன் பெறுமதியுள்ள 0.437ஹெக்டர் நிலமொன்றை ரிம்47,039-க்கு வாங்கிய விவகாரத்தையும் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TAGS: