பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் புக்கிட் ஜலில் தோட்டத் தொழிலாளர்கள் பல காலமாக விடுத்து வரும் கோரிக்கை அடுத்த செவ்வாய்க் கிழமை அதாவது ஜுலை 10ம் தேதி நிறைவேறும்.
2011ம் ஆண்டு தொடக்கம் நஜிப்பின் உதவி கோரி பல கடிதங்களை அந்தத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் அனுப்பியுள்ளன. ஆனால் தங்கள் நிலை குறித்து எந்த இறுதி முடிவையும் அவர்கள் பெறவில்லை.
கடந்த மே மாதம் அவர்கள் இரண்டு நாட்களுக்கு பிரதமர் அலுவலகத்துக்கு வெளியில் முகாமிட்ட பின்னர் பிரதமரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அந்தச் சந்திப்புக்கான தேதியை உறுதி செய்தது என புக்கிட் ஜலில் தோட்ட நடவடிக்கைக் குழு பொருளாளர் கே பாலகிருஷ்ணன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஐந்து பேராளர்களை அனுப்புவதற்கு குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரி நேற்று பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இன்று வந்த இன்னொரு தொலைபேசி அழைப்பில் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
புக்கிட் ஜலில் தோட்ட நடவடிக்கைக் குழுவைப் பிரதிநிதிக்க மூன்று குடியிருப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அந்தச் சந்திப்பில் பங்கு கொள்வதற்கு மலேசிய சோஷலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் அனுமதிக்கப்பட மாட்டார்.
அந்தச் சந்திப்பின் போது குழுவுக்கு ஆலோசகராக அருட்செல்வன் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அந்தக் குழு விரும்பியது. ஆனால் அவர் குடியிருப்பாளர்களில் ஒருவர் அல்ல என்பதால் அவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு பிரதமர் அலுவலகம் ஆட்சேபம் தெரிவித்தது.
என்றாலும் தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நஜிப் உதவுவார் என பாலகிருஷ்ணன் நம்பிக்கை கொண்டுள்ள நஜிப்,” என தமது தந்தையும் முன்னாள் பிரதமருமான அப்துல் ரசாக் ஹுசேனைப் பின்பற்ற வேண்டும் என்றார் .
“அவர் எப்போதும் நம்பிக்கை எனச் சொல்கிறார். எங்கள் பிரச்னைகளைப் பிரதமர் தீர்த்து வைப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கு நான்கு ஏக்கர் நிலம் கோரியுள்ளது பற்றிக் குறிப்பிட்ட போது பாலகிருஷ்ணன் சொன்னார்.
1980ம் ஆண்டு அரசாங்கம் அந்தத் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய பின்னர் அந்தக் குடும்பங்கள் அங்கு ரப்பர் பால் வெட்டுத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அரசாங்கம் அந்த நிலத்தை பகுதி பகுதியாக தனியார் வீடமைப்பு நிறுவனங்களிடம் விற்றது.
அந்தத் தோட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 1,800 ஏக்கரில் 26 ஏக்கார் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளது.
2007ம் ஆண்டு தொடக்கம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் வழங்கிய வெளியேற்ற நோட்டீஸ்களை அந்தக் குடும்பங்கள் நிராகரித்து வந்துள்ளன. இழப்பீடாக அரசாங்கம் கொடுக்க முன்வந்த குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளை ஏற்கவும் அவை மறுத்து விட்டன.