போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளுமாறு மனைவிக்கு அழுத்தம்

இசா தடுப்புக்காவல் கைதி ரஸாலி காசானின் மனைவியை புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் சந்தித்து கமுந்திங் இசா தடுப்புக்காவல் மையத்தின் பணியாளர்களுக்கு எதிராக அவர் செய்துள்ள போலீஸ் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தமளித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மத்திய போலீஸ் தலைமையகத்திலிருந்து பல அதிகாரிகள் ரஸாலியின் மனைவி நுனுர்ஹெனி ஒனிம்மை சந்தித்து அவர் செய்துள்ள போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளுமாறு கூறினர் என்று இசா எதிர்ப்பு குழுவான ஜிஎம்ஐ (GMI) இன்று கூறியது.

புகாரை மீட்டுக்கொள்ளவில்லை என்றால், இந்தோனேசிய குடிமகளான நுனுர்ஹெனி அவரது விசாவை புதுப்பிக்கும்போது பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று போலீசார் அவரிடம் கூறியதாக ஜிஎம்ஐ செயலாளர் அஹமட் சுகிரி அப்துல் ரஸாப் இன்று பின்னேரத்தில் மஸ்ஜித் நெகாரா முன்பு நடத்திய ஒரு எதிர்ப்புக் கூட்டத்தில் கூறினார்.

நுனுர்ஹெனியின் விசா செப்டெம்பரில் காலாவதியாகிறது. அவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் நாடு கடத்தப்பட்டால் அவருடைய குழந்தைகள் அவருடன் செல்ல முடியாது.

36 வயதான அவர் தமது கணவரை ஜூலை 2 இல் கமுந்திங் தடுப்புக்காவல் மையத்தின் பணியாளர்கள் அடித்து, அவர் மீது எச்சில் துப்பி துன்புறுத்தினர் என்று அவர்களுக்கு எதிராக போலீஸ் புகார் செய்திருந்தார்.

 

 

TAGS: