எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தாம் சொல்வது போல அரசியலிலிருந்து விலக விருப்பம் கொண்டிருந்தால் இனிமேல் நேரத்தை விரயம் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.
“அவர் அரசியலிலிருந்து இப்போதே விலக வேண்டும். பிரதமராவதற்கு அவர் கொண்டுள்ள விருப்பம் விழலுக்கு இறைத்த நீரைப் போன்றது. வீண் முயற்சியாகும்”, அவர் சொன்னார்.
மகாதீர் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள செக் குடியரசு அதிபர் வெகிலேவ் களாஸை கோலாலம்பூரில் மரியாதைக்காக சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலில் கூட்டரசு அதிகாரத்தை எதிர்த்தரப்பு கைப்பற்றத் தவறினால் அரசியலிலிருந்து விலகுவது பற்றித் தாம் பரிசீலிக்கக் கூடும் என அன்வார் அண்மையில் பைனான்ஷியல் டைம்ஸ் நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அன்வாருடைய அறிக்கை வெறும் பேச்சு மட்டுமே எனக் கூறிய மகாதீர், அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி தோல்வி கண்டாலும் கூட பிரதமராக வேண்டும் என அன்வார் தொடர்ந்து கனவு காண்பார் என்றும் மகாதீர் சொன்னார்.
அவர் ஒய்வு பெறுவதற்கு முன்னதாக தமது கனவை நனவாக்கிக் கொள்வதற்கு உதவியாக ஐந்து நாட்களுக்கு அன்வார் பதவி வகிப்பதற்கு கௌரவப் பிரதமர் பதவி உருவாக்கப்பட வேண்டுமென மகாதீர் கிண்டலாகக் கூறினார்.
இதனிடையே அன்வாருடைய அறிக்கை அடுத்த பொதுத் தேர்தலில் மக்களிடமிருந்து அனுதாப வாக்குகளைப் பெறுவதற்கான இன்னொரு தந்திரம் என கூட்டரசுப் பிரதேச அம்னோ தொடர்புக் குழுச் செயலாளர் சையட் அலி அல்ஹாப்ஸி தெரிவித்துள்ளார்.
“அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அன்வாருக்கே தெரியும் என்பதால் அவர் இப்போதே அரசியலிலிருந்து ஒய்வு பெற வேண்டும். மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள பாரிசான் நேசனல்( பிஎன்) நிரூபித்துள்ள சாதனைகளுக்கு எதிராகப் போட்டியிட முடியாது என்பதை அவரும் எதிர்த்தரப்புக் கூட்டணியில் உள்ள மற்றவர்களும் உணர வேண்டும்,” என பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.
பிரதமராக வேண்டும் என்ற பெரு விருப்பத்தை அன்வார் கொண்டிருப்பதால் அடுத்த தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி தோல்வி கண்டாலும் அவர் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபடுவர் என தாம் எண்ணுவதாகவும் அந்த செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சொன்னார்.
பெர்மாத்தாங் எம்பி-யுமான அன்வார் மனோதத்துவப் போரிலும் பிரச்சாரத்திலும் வல்லவர் என்பதால் பிஎன் தலைவர்கள் அன்வார் தந்திரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சையட் அலி அறிவுரை கூறினார்.