வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பாரிசான் தோல்வி!

மக்கள் ஓசை தமிழ் நாளிதழ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த உயிர் சேதமும் அங்கு ஏற்படாதது இறைவன் செயலாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவரது செய்தி அறிக்கையில் கூறுகிறார்.

நாளிதழ் நிர்வாகம், பாதுகாப்பு அம்சத்தில் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று கூறிய அவர், நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதில் பாரிசான் அரசு தோல்வி கண்டு விட்டது என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு சான்றாகும் என்றார்.

“ஒரு நாட்டில் வன்முறை அதிகரிக்கும்போது அந்நாட்டை ஆளும் அரசாங்கம், மக்களைச் சரியான ரீதியில் வழிநடத்துவதில் தோல்விக்கண்டு விட்டதற்குச் சான்றாகும்.

 

“இவ்வாண்டு மே மாத தொடக்கத்தில் மாணவி ரெசினாவின்   அடையாள அட்டை மற்றும் இதர அடையாளப் பத்திரங்கள் மீது ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்க்க புத்ராஜெயா பிரதமர்  அலுவலகம் சென்றவர்கள் பிரதமர் அலுவலகம் முன் தாக்கப் பட்டுள்ளனர். அதிக பாதுகாப்புக்கு உட்பட்டிருக்கும் இடத்திலேயே வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

அதன் பின்னர் மே 19 ஆம் தேதி பெர்சே இணைத் தலைவர் அம்பிகா கலந்துகொண்ட நிகழ்வில் கல் வீசினர். மே 24 ஆம் தேதி   அன்வார் கலந்து கொண்ட லெம்பா பந்தாய் பிகேஆர் கூட்டத்தில் கல் வீசி ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு மே மாத இறுதியில் கணபதிராவும் அவர் சகோதரரும் தாக்கப்பட்டனர். கடந்த வாரம் பினாங்கு  முதலமைச்சர் லிம் குவான் கலந்து கொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில், போலீசார் கண்முன்னே அவரை தாக்க முற்பட்டவரை ஒரு பக்காத்தான் உறுப்பினர் தடுத்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது”, என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று மக்கள் ஓசை தமிழ் நாளிதழ் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் நாம் காணும் வன்முறைகளின் நீண்ட பட்டியல்களும், தினமும் இந்து ஆலயங்களில்  சிலைகள் மூர்க்கத்தனமாக அகற்றப்பட்டு நடத்தப்படும்  கொள்ளைகளைத் தடுக்க அல்லது ஆலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்க போலீசாரும் பாரிசான் அரசும் தவறியுள்ளது நாட்டில் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு அற்ற நிலை உருவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று சேவியர் மேலும் கூறினார்.

“நாட்டில் நடக்கும் குற்றசெயல்கள் அரசியல் தொடர்புடையவைகளோ, வேறு நோக்கங்களுக்கான வன்முறைகளோ, அவை அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயல்களாகும்”, என்பதை சேவியர் வலியுறுத்தினார்.

நாடு அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இவ்வேளையில்,  நாட்டில் மக்களும், பொது இயக்கங்களும், அரசியல்வாதிகளும் எதிர்கொள்ள வேண்டியுள்ள இம்மாதிரியான மிரட்டல்கள், இந்நாட்டின் ஜனநாயக  அமலாக்கத்திற்கு விடப்படும் சவாலாகக் கருத வேண்டியுள்ளது என்றாரவர்.

மக்கள் ஓசை தமிழ் நாளிதழ் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதல் மட்டுமின்றி, தங்கள்  உயிர், உடமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய பொறுப்பற்ற அரசை நீக்கி, தங்களுக்கு ஏற்ற பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தீர்க்கமானதோர் நல்ல முடிவை 13 ஆவது பொதுத் தேர்தலில் எடுக்க மக்கள் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சேவியர், கடமையைச் செய்யத் தவறிய அரசியல்வாதிகளை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றார்.

TAGS: