மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தாம் அதிகாரத்துக்கு வருவதை எண்ணி டாக்டர் மகாதிர் முகம்மட் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறினார்.
“நான் பிரதமர் ஆவதை எண்ணி மிகவும் அச்சம் கொண்டிருக்கும் ஒருவர் உண்டென்றால் அது மகாதிராகத்தான் இருக்க வேண்டும்”.நேற்றிரவு ரவாங்கில் நிதிதிரட்டு நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
“எவராவது அவர் அருகில் சென்று ‘மகாதிர் அவர்களே,அன்வார் பிரதமர் ஆகிவிடுவார்போல் தெரிகிறதே’ என்று மெதுவாகக் கூறினால் போதும், ‘நடக்காது, முடியாது’ என்று குதிப்பார்”, என்று அவர் கூறியதைக் கேட்டு அங்கிருந்த சுமார் ஆயிரம் பேர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ராவாங்கில் இன்னொரு செராமாவுக்குச் செல்லுமுன்னர் செய்தியாளார்கள் அவரைச் சந்தித்து அடுத்த பொதுத் தேர்தலில் தோற்றுப்போகும் முன்னர் அன்வார் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவது நல்லது என்று மகாதிர் குறிப்பிட்டிருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
“அவருக்குப் பல நிறுவனங்களில் பொறுப்பு இருக்கிறது.அதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதானே.
“அவரும் அவரின் பிள்ளைகளும் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.அதனால்தான் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார்.
முன்னதாக தமது உரையில் அன்வார்,எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோற்றுப்போனால் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் எண்ணத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனாலும், பக்காத்தான் கூட்டணி வெல்லும் என்றே நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய நிகழ்வில் அன்வார் தவிர்த்து சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங், கெப்போங் எம்பி டான் செங் கியாவ், குவாந்தான் எம்பி பவுசியா சாலே ஆகியோரும் பேசினார்கள்.
நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ராவாங் சட்டமன்ற உறுப்பினர் கான் பெய்ன் நெய், மலேசியாவில் ஊழலையும் இனவாத அரசியலையும் மாற்றுவது எளிதல்ல என்றார்.என்றாலும், எகிப்து, மியான்மார் போன்ற நாடுகளில் ஜனநாயக மலர்ச்சி ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் மாற்றம் என்பது கனவாகிப் போய்விடாது என்றார்.அந்த மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டும் என்று ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.