சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் சபாஷ்-க்கு கொடுக்குமாறு உத்தரவிடப்பட்ட 200,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு டிஏபி நிதி திரட்டுகின்றது.
நீர் வள உரிமைகளுக்காக 1 ரிங்கிட் எனப் பெயரிடப்பட்டுள்ள முதலாவது இயக்கம்; 100,000 மலேசியர்கள் சபாஷ்-க்கு எதிராக டோனி புவா-வை ஆதரிக்கின்றனர். கட்சிக் கணக்கிற்கு 1 ரிங்கிட் கொடுக்குமாறு குடிமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
இரண்டாவது இயக்கத்தின் கீழ் ஜுலை 17ம் தேதி நிதி திரட்டுவதற்கான விருந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும். அதில் பக்காத்தான் ராக்யாட்டின் மூத்த தலைவர்கள் உரையாற்றுவார்கள்.
அதில் கலந்து கொள்கின்றவர்களுக்கு ஒரு நபருக்கு 100 ரிங்கிட் என ஒரு மேசைக்கு 1,000 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும். விஐபி என்ற பெருமக்கள் மேசைகளுக்கு 3,000 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படும்.
“அவ்விரு இயக்கங்களின் வெற்றி பெறும் போது மலேசியர்களுக்கு தாங்கிக் கொள்ளக் கூடிய கட்டணத்தில் தண்ணீரை அனுபவிக்கும் உரிமை பிஎன் -னுடைய சேவகர் நிறுவனங்களுக்கு தனியார்மயத்தின் மூலம் வழங்கப்படக் கூடாது என்பது கூட்டரசு அரசாங்கத்துக்கு உணர்த்தப்படும்,” என டிஏபி பொருளாளர் போங் கூய் லூன் இன்று கூறினார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அமெலியா தீ ஹொங் ஜியோக், அந்த அவதூறு வழக்கில் இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஜுன் 6ம் தேதி தீர்ப்பளித்தார்.
புவா ஜுன் 22ம் தேதி அந்தத் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்து கொண்டுள்ளார். ஜுலை 24ம் தேதி அது வழக்கு நிர்வாகத்துக்கு வருகிறது.
முறையீடு செய்து கொள்ளப்பட்ட போதிலும் நீதிமன்றம் தீர்ப்பளித்த தொகையைக் கொடுக்குமாறு சபாஷ் வழக்குரைஞர்கள் புவா-வுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
2010ம் ஆண்டு நன்யாங் சியாங் பாவ் நாளேட்டில் வெளியான கட்டுரை ஒன்றின் தொடர்பில் 2011ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி சபாஷ் வழக்குத் தொடர்ந்தது.