முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை தாம் ‘வெறுப்பதாக’ கூறப்படுவதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் நிராகரித்துள்ளார்.
தாம் உண்மையில் ‘மகாதீர் தத்துவத்தையே’ நிராகரிப்பதாகவும் அதற்கு புத்துயிரூட்டப்படுவதை எதிர்ப்பதாகவும் லிம் விளக்கினார்.
அம்னோ, பிஎன் கொள்கைகளில் ‘மகாதீர் தத்துவத்தை’ மீண்டும் இடம் பெறச் செய்து அதனை நிலை பெறச் செய்வதற்கு மகாதீர் இப்போது கடுமையாக உழைத்து வருவதாக அவர் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
‘மகாதீர் தத்துவத்தை’ எதிர்க்கும் தமது நிலையை துங்கு அப்துல் ரஹ்மான், ஹுசேன் ஒன், அப்துல்லா அகமட் படாவி ஆகிய முன்னாள் பிரதமர்கள் பகிர்ந்து கொண்டுள்ளதாக லிம் மேலும் கூறினார்.
“நான் அவரை வெறுக்கவில்லை என்பதை மகாதீருக்குக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். என்றாலும் மற்ற மூன்று முன்னாள் பிரதமர்களைப் போன்றும் 2012ம் ஆண்டு பெரும்பாலான மலேசியர்களைப் போன்றும் நான் ‘மகாதீர் தத்துவத்தை’ எதிர்க்கிறேன், 13வது பொதுத் தேர்தலில் மலேசிய அரசியலுக்கு அது திரும்புவதையும் நான் எதிர்க்கிறேன்,” என்றார் அவர்.
இனவாதத்தை தூண்டி விடுவது உட்பட மகாதீர் தத்துவத்தின் மோசமான தன்மைகளுக்கு புத்துயிரூட்ட மகாதீர் அண்மையக் காலமாக முயன்று வருகிறார் என லிம் சொன்னார்.
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி கண்டால் மலாய்க்காரர்கள் “அதிகாரத்தை இழந்து விடுவர்” என மகாதீர் அடிக்கடி விடுக்கும் எச்சரிக்கை மகாதீர் தத்துவத்திற்கு மற்ற எடுத்துக்காட்டுக்களில் அடங்கும்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பலவீனமாக இருக்கிறார். சீர்திருத்தங்கள் பதற்ற நிலையை ஏற்படுத்தி விடும், சீன வாக்காளர்கள் “அரசாங்கத்தை முடிவு செய்யும் ஆற்றலை” பெற்றுள்ளனர் என்ற எச்சரிக்கைகள் மற்ற உதாரணங்களில் அடங்கும்.
“அந்த மருட்டல்கள்… உண்மையில்லாதவை என்பதோடு தீவிரவாதத்தைத் தூண்டுகின்றவை. அவை மலேசிய உருவாக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை. பாங்சா மலேசியா என்ற அவரது 2020 இலட்சியம், நஜிப்பின் ஒரே மலேசியா கோட்பாடு ஆகியவற்றுக்கும் முரணானவை,” என்றார் லிம்.
மகாதீர் தமது உரைகளிலும் வலைப்பதிவிலும் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் அவரை லிம் கடுமையாகக் குறை கூறி வருகிறார். தமது அரசியல் பாணியை நஜிப் நிர்வாகத்துக்குள் திணிப்பதற்கு மகாதீர் முயலுவதாக லிம் குற்றம் சாட்டினார்.
லிம் குறை கூறுவதற்குப் பதில் அளித்த மகாதீர், மகாதீர் தத்துவம் என்ற ஒன்றே இல்லை என கூறினார். அத்துடன் லிம் தம்மை ‘வெறுப்பதாகவும்’ அவர் குற்றம் சாட்டினார்.
“அவர் ஏன் என்னை இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை,” என மகாதீர் நிருபர்களிடம் கூறினார்.
நஜிப் மீது தமது செல்வாக்கைத் திணிக்க தாம் முயலுவதாகச் சொல்லப்படுவதையும் மகாதீர் மறுத்தார். தாம் அதனைச் செய்தால் எல்லாம் ‘வேறு விதமாக’ இருக்கும் என்றும் அவர் சொன்னார்.