குதப்புணர்ச்சி வழக்கு II: நஜிப்பும் ரோஸ்மாவும் சாட்சி அளிப்பார்களா?

குதப்புணர்ச்சி வழக்கு IIல் அன்வாருடைய எதிர்வாதம் நாளை தொடருகிறது. அது வெள்ளிக்கிழமை வரையில் தொடரும்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ஒளிப்பதிவ் செய்யப்பட்டதாக கூறப்படும் இன்னொரு செக்ஸ் வீடியோவை வெளியிடப் போவதாக அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ மருட்டியுள்ள வேளையில் வழக்கு மீண்டும் தொடருகிறது.

நாளை ஆஸ்திரேலிய மரபணு நிபுணர் டாக்டர் பிரையான் மெக்டொனால்ட் தமது சாட்சியத்தைத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் சாட்சியமளிப்பார். அவரை வழக்குரைஞர் ராம் கர்பால் சிங் விசாரணை செய்வார். அவர் பிரதிவாதித் தரப்பின் நான்காவது சாட்சி ஆவார்.

கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவர்கள், குதத்திலிருந்து எடுத்த மாதிரிகள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்காத வேளையில் அவை நல்ல நிலையில் இருந்ததாகக் கூறப்படுவது தம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டதாக மெக்டொனால்ட் ஏற்கனவே அளித்த சாட்சியத்தில் கூறியிருந்தார்.

அந்த மாதிரிகள் இரசாயன நிபுணர் ஒருவரிடம் கொடுக்கப்படுவதற்கு முன்னர் மேசை டிராயர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தன.

98 மணி நேரம் கழித்தும் தாம் அந்த மாதிரிகளில் விந்துவைக் கண்டதாக இரசாயன நிபுணரான டாக்டர் சியா லே ஹொங் அளித்த சாட்சியமும் அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மெக்டொனால்ட்டுக்கு அடுத்து இரசாயனத்துறையின் தலைமை இயக்குநர் லிம் கொங் பூன் சாட்சியமளிப்பார்.

அவர் இன்னும் சோதனைக் கட்டத்தில் இருக்கும் தடயவியல்  ஆய்வுக் கூடத்தின் நடப்பு நிலையை விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிம் ஏற்கனவே 1998ம் ஆண்டு குதப்புணர்ச்சி வழக்கு Iல் சாட்சியமளித்துள்ளார்.  ஆனால் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

லிம் தவிர பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவி ரோஸ்மா மான்சோர், முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் படைத் தலைவர் முகமட் ரோட்வான் முகமட் யூசோப் ஆகியோரும் சாட்சிகள் பட்டியலில் உள்ளனர்.

1998, 1999ம் ஆண்டுகளில் நடைபெற்ற வழக்கில் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பிரதிவாதித் தரப்பு வெளியிட்ட சபீனாவை ( நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வெளியிடப்படும் உத்தரவு) தள்ளி வைக்குமாறு விண்ணப்பித்துக் கொண்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் இன்று வரை நஜிப்பும் ரோஸ்மாவும் அத்தகைய விண்ணப்பங்களை சமர்பிக்கவில்லை.