“கதிரியக்கக் கழிவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் இல்லையேல்….”

பாகாங்,கெபெங் அரிய மண் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகள் மலேசியாவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கெராக்கான் தலைவர் கோ சூ கூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அல்லது, அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த கழிவுப்பொருளைப் பக்குவப்படுத்த பொருத்தமான திட்டம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்.

லினாஸ், மறுசுழற்சிமுறையின்வழி  கழிவுப்பொருளின் கதிரியக்கத்தன்மையைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாக கோ கூறியதாக சின் சியு டெய்லி தெரிவித்துள்ளது.

அத்திட்டம் விவகாரத்துக்கு திருப்திகரமான தீர்வைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.அதைச் செய்யத் தவறினால்  சுத்திகரிப்பு ஆலையை ஏற்பதற்கில்லை என்றாரவர்.

நேற்று பெந்தோங்கில் பகாங் கெராக்கான் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது கோ இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லினாஸால் திருப்திகரமான தீர்வு ஒன்றை வழங்க முடியாவிட்டால் அரசாங்கம் சுத்திகரிப்பு ஆலையை மூடும்.அதற்காக இழப்பீடு கொடுக்க வேண்டியிருந்தால் அதை எதிர்கொள்ளவும் அது தயார் என்றாரவர்.

இதனிடையே, மலேசியாவைப் பாதுகாப்போம், லினாசைத் தடுத்து நிறுத்துவோம் குழு, லினாஸ் ஆலைக்கு ஒப்புதல் அளித்த அரசாங்கத்தை எதிர்த்து குவாந்தான் உயர் நீதிமன்றத்தில் இவ்வாரம் இன்னொரு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.

“இரண்டு நோக்கங்களுடன் அவ்வாறு செய்யப்படுகிறது”, என்று அதன் தலைவர் டான் புன் டீட் தெரிவித்ததாக சின் சியு டெய்லி கூறிற்று.

“அது குவாந்தான் மக்களின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்யக்கோரும் அறிவியல்,தொழில்நுட்ப,புத்தாக்க அமைச்சரின்(மெக்சிமஸ் ஒங்கிலி) முறையீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் லினாஸுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமத்தை முடக்கி வைக்குமாறும் வேண்டிக்கொள்ளும்”, என்றாரவர்.

TAGS: