வங்காள தேசிகளுக்கு குடியுரிமை எளிதாக வழங்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப் பிரதமர் மறுக்கிறார்

இந்த நாட்டில் வாக்காளர்களாக மாறும் பொருட்டு வங்காள தேசத் தொழிலாளர்களுக்கு எளிதாக குடியுரிமை கொடுக்கப்படுகிறது எனக் கூறப்படுவதை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மறுத்துள்ளார்.  

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிசான் நேசனல் அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர்.

“அவ்வாறு சொல்லப்படுவது உண்மையா என நாங்கள் வங்காள தேச அதிகாரிகளை விசாரிக்க முடியும். ஆனால் நாங்கள் எளிதாக குடியுரிமையை வங்காள தேசிகளுக்கு வழங்கவில்லை. மலேசியக் குடியுரிமை பெற விரும்பும் எந்த அந்நியரும் பல நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் எவ்வளவு காலத்திற்கு இந்த நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பதும் அதில் ஒன்றாகும்.”

“நாங்கள் வங்காள தேசிகளுக்கு சிறப்பு சலுகை ஏதும் அளிக்கவில்லை. அதுவும் தேர்தல்களுடன் அது இணைத்துப் பேசப்பட்டுள்ளது. குடிமக்களாகுமாறு அந்நியர்களைக் கேட்டுக் கொண்டு அடுத்து  எங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளும் அளவுக்கு நாங்கள் விரக்தி அடைந்து விட்டோம் என்ற தோற்றத்தை உருவாக்க முயலுகின்றனர்.”

“அத்துடன் வாக்களிப்பு நடைமுறையில் ஒருவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.”‘ துணைப் பிரதமர், கோலாலம்பூர் புத்ரா உலக வாணிக வளாகத்தில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அடுத்த பொதுத் தேர்தல் ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மலேசியாவில் உள்ள வங்காள தேசத் தொழிலாளர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்கப்படுவதாக வங்காள தேச பிரதமர் அலுவலகத்தின் அரசு சாரா அமைப்புக்கள் பிரிவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று குறித்து முஹைடின் கருத்துரைத்தார்.

அந்த விஷயத்தில் உண்மை ஏதும் இருக்கிறதா என்பதை சோதனை செய்யுமாறு தாம் டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் அவர் சொன்னார்.

-பெர்னாமா

TAGS: