கோலாலம்பூர் பேரணியில் அரசதந்திரிகள் பங்கு கொள்ளவில்லை என்கிறது சிங்கப்பூர்

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி ஏப்ரல் மாதம் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக மலேசியா பழி சுமத்துவதை அந்த நகர நாடு நிராகரித்துள்ளது.

அதன் வெளியுறவு அமைச்சர் கே சண்முகம் நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார்.

அந்த ஏப்ரல் பேரணியில் “பாரபட்சமற்ற பார்வையாளர்களாக” மற்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் சகாக்களுடன் இருந்ததாக அவர் சொன்னார்.

“எங்கள் அதிகாரிகள் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அங்கு பார்வையாளர்களாக இருந்தனர்,” எனச் சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த போது  கூறினார்.

“அவர்கள் மஞ்சள் சட்டைகளை அணிந்திருக்கவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தங்களைப் பிணைத்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை,” என்றார் அவர்.

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பேரணியில் சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் மலேசியா, சிங்கப்பூர் தூதரை அழைத்து ஆட்சேபம் தெரிவித்தது.

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது உட்பட தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நூறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மலேசியத் தலைநகரில் கூடினர்.  அவர்கள் மஞ்சள் சட்டைகளை அணிந்திருந்தார்கள்.

கண்ணீர் புகைக் குண்டுகளையும் இரசாயனம் கலந்த நீரையும் பாய்ச்சிய போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகலந்தனர். 500க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தக் குற்றச்சாட்டு உறவுகளைப் பாதிக்கும் சாத்தியமில்லை என சண்முகம் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் நிலத் தகராறு உட்பட பல நீண்ட காலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழி வகைகளை காண இரண்டு நாடுகளும் முயற்சி செய்த பின்னர் அவற்றுக்கு இடையில் உறவுகள் மேம்பாடு கண்டன.

“நாம் இப்போது அனுபவித்து வருகின்ற வலுவான உறவுகளை மேம்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்,” என்றார் சண்முகம்.

அந்த உறவுகளை இந்த வழியில் சீர்குலைக்க எங்களில் யாருக்கும் எண்ணமில்லை.”

“சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகள் எந்த ஒரு குறிப்பிட்ட கருத்து வேறுபாடுகளைக் காட்டிலும் மிகப் பெரியவை.”

ஏஎப்பி

 

TAGS: