வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முன்வந்தவர்கள் 20,000பேர் மட்டுமே, சிலர் கூறுவதுபோல் அரை மில்லியன் அல்ல என்கிறது தேர்தல் ஆணையம்(இசி).
இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், வெளிநாடுகளில் உள்ள 500,000-த்துக்கும் மேற்பட்ட மலேசியருக்கு பதிவுசெய்துகொள்ளும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்தார்.
“வெளிநாடுகளில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் வாக்காளராக பதிவு செய்ய வரிசை பிடித்து நிற்பதாகக் கூறப்படுவதைக் கேட்கிறோம்.ஆனால், பதிவுசெய்ய வந்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாகும்”.வான் அஹ்மட், நேற்றிரவு கோலாலம்பூரில் பெர்னாமா டிவி-இல் ‘ஹல்லோ மலேசியா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
வெளிநாட்டுத் தூதரகங்களில் பதிந்துகொண்டவர் சுமார் 20,000பேர்தான் என்பதை விஸ்மா புத்ரா ஆவணங்கள் காண்பிக்கின்றன.
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நாடாளுமன்றம் முடிவு செய்ததை அடுத்து இசி அது பற்றி விஸ்மா புத்ராவுடனும் குடிநுழைவுத்துறையுடனும் விவாதித்து ஐந்தாண்டுகளில் ஒரு முறையாவது நாடு திரும்பி வந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது என்றாரவர்.
பதிவு செய்து கொண்டபின்னர் அவர்கள் அஞ்சல்வழி வாக்களிக்கவும் அனுமதி கேட்க வேண்டும் என்று வான் அஹ்மாட் கூறினார்.
-பெர்னாமா