எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமருக்கு சம்பந்தம் உண்டு;ஆவணம் நிரூபிக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் உயர்-நிலைக்குழு ஒன்று ரிம1.18பில்லியன் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டப்பணியை ஜார்ஜ் கெண்ட்-டைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுமத்துக்கு வழங்கியதைக் காண்பிக்கும் ஆவணமொன்றை பிகேஆர் அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த ஆவணம், ஜூன் 21-இல் நடந்த நிதி அமைச்சின் கொள்முதல் குழு(ஜெபிஎம்கே)க் கூட்டத்தின் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது.அக்கூட்டத்துக்கு நிதி அமைச்சருமான நஜிப் தலைமை வகித்தார்.

இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு அத்திட்டத்துக்கான குத்தகை கொடுக்கப்பட்டது வழக்கத்துக்கு மாறான ஒன்று என்றார்.அது அனுபவமில்லாதது என்பதுடன் டெண்டரில் உயர்ந்த விலையையும் குறிப்பிட்டிருந்து.

“ஜார்ஜ் கெண்டுக்கு நீர் அளவுமானி (மீட்டர்) தயாரிப்பில்தான் நிபுணத்துவம் உண்டு.இதற்குமுன்னர் அந்தப் பணிக்குத் தேவையான குறைந்தபட்ச தொழில்நுட்பத் தகுதிகூட இல்லை என்பதால்தான் அது நிராகரிக்கப்பட்டிருந்தது”, என்று ரபிஸி கூறினார்.

“நீர் அளவுமானிகள் தயாரிக்கும் நிறுவனத்திடம் பில்லியன் ரிங்கிட் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டப்பணியை வழங்குவது பெருங்கேடாகத்தான் முடியும் என்று நினைக்கிறேன்.”

இக்குற்றச்சாட்டு குறித்து நஜிப்பிடம் விளக்கம் கேட்டதற்கு அதைப் புறந்தள்ளிய அவர் எல்லாம் முறைப்படியே செய்யப்பட்டதாகக் கூறினார்.

TAGS: