புவா: முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் புதல்விக்கு ‘பெரும் பங்கு’ கொடுக்கப்பட்டுள்ளது

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதுப்பிக்கப்படக் கூடிய மாற்று எரிபொருள் திட்டத்தில் அண்மையில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற முகமட் சிடிக் ஹசானுடைய புதல்விக்கு “பெரும் பங்கு” கொடுக்கப்பட்டுள்ளதாக பக்காத்தான் ராக்யாட் இன்று கூறிக் கொண்டுள்ளது.

Feed-In Tariff (FiT) நடைமுறை வழியாக சூரிய வெப்ப எரிபொருளுக்கான ஒதுக்கீட்டில் பெரும்பகுதி எரிபொருள் தொழிலில் ‘திறமை நிரூபிக்கப்படாத’, முகமட் சிடிக்-கின் புதல்வி சூஸி சுலியானாவுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கோரினார்.

Feed-In Tariff (FiT) வழியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவான 45.9 மெகாவாட்டில் 32.4 விழுக்காடு சூஸியின் கட்டுக்குள் இருப்பதை ஆய்வுகள் காட்டுவதாக புவா சொன்னார். அது நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 1 மெகாவாட்-5 மெகாவாட் வரம்பைக் காட்டிலும் அதிகமாகும்.

உயிரியல் எரிவாயு, சாண எரிவாயு, சிறிய நீர் மின்சாரம், சூரிய வெப்பம் போன்ற புதுப்பிக்கப்படக்கூடிய எரிபொருள் வழி எரிசக்தியை உற்பத்தி செய்வதற்காக Feed-In Tariff (FiT) முறை அறிமுகம் செய்யப்பட்டது.

300kWh-க்கு மேல் பயன்படுத்துகின்றவர்களுடைய மின்சாரக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு கூடுதலாக வசூலிப்பதின் மூலம் பயனீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் பணத்தைக் கொண்டு அந்த முறை அமலாக்கப்படுகின்றது.

அந்தத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படக்கூடிய எரிபொருள் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் FiT அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக பதிவு செய்து கொள்வதற்கு செடா எனப்படும் நீடித்த எரிபொருள் மேம்பாட்டு வாரியத்துக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அதற்கு பின்னர் அவை தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தெனாகா நேசனல் பெர்ஹாட்டுக்கு விற்க முடியும். அதற்கு செடா சட்டம் 2011ல் வகை செய்யப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தை எரிபொருள், பசுமைத் தொழில்நுட்ப, நீர்வள அமைச்சு கண்காணித்து வருகிறது. எந்த ஒரு FiT விண்ணப்பதாரருக்கும் ‘ஏகபோக உரிமைகள்’ கொடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யப் போவதாக அது வாக்குறுதி அளித்துள்ளது.

 

TAGS: