நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயகமாக்குவதற்காக இசா ரத்துச் செய்யப்படுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படுவது,  உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடாக மலேசியாவைத் திகழச் செய்வதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியுள்ளார்.

நாட்டை மேம்படுத்துவதில் அடைந்துள்ள வெற்றி, மக்களுடைய மன முதிர்ச்சி அதிகரித்துள்ளது, சமூகத்தில் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கூடியிருப்பது ஆகிய காரணங்களும் இசா சட்டத்தை ரத்துச் செய்வதை சாத்தியமாக்கியுள்ளன என்றும் அவர் சொன்னார்.

“அந்த முடிவுக்கு எந்தத் தரப்பின் நெருக்குதலும் காரணம் அல்ல”, என அவர் தமது நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கூறினார். அந்த உபசரிப்பில் ஐம்பாதியிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மான்சோரும் அங்கிருந்தார்.

மனித உரிமைகள் அம்சத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அரசியல் உருமாற்றத்தின் ஒரு பகுதியாக சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்றும் நஜிப் தெரிவித்தார்.

“பொருளாதாரம், கல்வி ஆகிய விஷயங்களில் மட்டுமின்றி ஜனநாயகக் கோட்பாடுகளை நிலை நிறுத்துவதிலும்   நாம் இன்னொரு படி முன்னேற வேண்டிய தருணம் வந்து விட்டது,” என்றாரவர்.

பிஎன் அரசாங்கம் மக்களுடைய நல்வாழ்வுக்காக “எல்லா அம்சங்களிலும்” மக்களுடைய போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்தும் என்றும் அவர் சொன்னார்.

பல இன ஒற்றுமையுடன் கூடிய மலேசியாவின் புதுமையான அம்சம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

-பெர்னாமா

TAGS: