பேராக்கை பிஎன் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய அரசு ஊழியர் பாஸ் கட்சியில் சேர்ந்தார்

2009ம் ஆண்டு பேராக் மாநில அரசாங்கத்தை பிஎன் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் பேராக் மாநிலச் சட்டமன்ற செயலாளர் அப்துல்லா அந்தோங் சாப்ரி அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஸ் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார்.

ஈப்போவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாஸ் உறுப்பினர்களை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வின் போது அப்துல்லா அந்த இஸ்லாமியக் கட்சியில் சேருவதற்கான தமது முடிவை அறிவித்தார் என சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தை பிஎன் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக தாம் இயங்கியதாக கூறப்படுவது பற்றிக் குறிப்பிட்ட அவர், மாநிலச் சட்டமன்றச் செயலாளர், மாநில ஆட்சி மன்றத்துக்கான செயலாளர் என்ற முறையில் தமது கடமைகளைச் செய்வதைத் தவிர தமக்கு வேறு வழி இல்லை என்றார்.

“ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் நடப்பு அரசாங்கம் அதற்கு ஆதரவளிப்பதில் நான் ஐயப்பாடு கொண்டுள்ளதை கவனித்திருக்க வேண்டும். அதனால் அது என்னை 2010ம் ஆண்டு பேராக் நில, சுரங்கத் துறைக்கு மாற்றியது. அதே ஆண்டு நான் பதவி ஒய்வு பெற்றேன்,” என அவர் சொன்னதாக சின் சியூ குறிப்பிட்டுள்ளது.

நடப்பு பிஎன் அரசாங்கம் மீது கொண்டுள்ள அதிருப்தியே தம்மை பாஸ் கட்சியில் சேருவதற்குத் தூண்டியது என்றும் அப்துல்லா சொன்னார்.

தாஜுல் ரோஸ்லி கசாலி, முகமட் நிஜாட் ஜமாலுதின், இப்போது உள்ள ஸாம்ரி அப்துல் காதிர் ஆகியோரின் நிர்வாகத்தில் அப்துல்லா மாநிலச் சட்டமன்றச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி தாங்கள் சுயேச்சை உறுப்பினர்கள் என அறிவித்ததுடன் பிஎன் -னுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினர். அதனைத் தொடர்ந்து மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன்-னுக்குப் பெரும்பான்மை கிடைத்தது.

பின்னர் பேராக் மாநில அரசாங்கத்தை புதிய தேர்தல் ஏதும் நடத்தாமல் பிஎன் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் கைப்பற்றியது.

அதிகாரப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்த போது சட்டமன்ற சபாநாயகருடைய உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமையைக் கொண்டிருந்த அப்துல்லா பிஎன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவி செய்வதில் முக்கியப் பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

தமது உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியதற்காக அப்போதைய சட்டமன்ற சபாநாயகர் வி.சிவகுமார் அப்துல்லாவை இரண்டு முறை இடை நீக்கம் செய்தார். ஆனால் பக்காத்தான் நிர்வாகத்தை வீழ்த்தும் நோக்கம் கொண்டிருந்த பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சாதகமான உத்தரவுகளை அப்துல்லா தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

பாஸ் அண்மைய காலமாக ஒய்வு பெற்ற பல முதுநிலை அரசாங்க அதிகாரிகளை தீவிரமாக கட்சிக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் திரங்கானு கல்வித் துறை இயக்குநர் அகமட் ஜபிடி சம்சுதின், நில, கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் நிக் ஜைன் நிக் யூசோப், குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் பாவ்சி ஷாஆரி ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

TAGS: