2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது அரசாங்கம், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதை சமாளிப்பதற்கன பல நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளது.
இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கூறுகிறார்.
வாழ்க்கைச் செலவுகள் இப்போது அதிகரித்துள்ளதற்கு உலக நிலைத்தன்மை சீர்குலைந்திருப்பதே காரணம் எனக் குறிப்பிட்ட அவர் உணவு விநியோகத்தைப் பொறுத்த வரையில் தேவையும் உற்பத்தியும் சமமாக இல்லை எனக் குறிப்பிட்டார்.
“உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளதும் விலை ஏற்றத்துக்கு இன்னொரு காரணம் ஆகும்.
மலேசியாவில் அந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக அதனையும் அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது.”
“நமது சூழ்நிலையில் உணவுப் பொருள் விநியோகம், வீடமைப்பு, பொதுப் போக்குவரத்து ஆகியவையும் வாழ்க்கைச் செலவில் அடங்கியுள்ளன. அரசாங்கம் அதற்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை 2012 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் தாக்கல் செய்யப்படும்.”
அகமட் ஹுஸ்னி, ஈப்போவில் ஜெலாபாங் பாரு ருக்குன் தெத்தாங்கா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.
அவசரமான பிரச்னைகளுக்கு குறுகிய கால தீர்வுகளும் காணப்படும். அத்துடன் நீண்ட கால அடிப்படையில் கட்டமைப்புக்களை வலுப்படுத்தி தீர்வுகளும் காணப்படும் என்றார் அவர்.
“எடுத்துக் காட்டுக்கு, பொதுப் போக்குவரத்து விவகாரங்களைப் பொறுத்த வரையில் கூட்டரசுப் பிரதேச மக்களுடைய நன்மைக்காக எம்ஆர்டி திட்டத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது”, என்றார் அகமட் ஹுஸ்னி.
கோலாலம்பூருக்கு வெளியில் உள்ள மக்களுக்காக நடப்புப் போக்குவரத்து முறையை மேம்படுத்துவது உட்பட விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் நில பொதுப் போக்குவரத்து ஆணையத்துக்கு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனது பரிந்துரைகளை அந்த ஆணையம் அமைச்சரவையிடம் சமர்பிக்கும்.