மஞ்சள் டி-சட்டைகளுக்குத் தடைவிதிப்பதுதான் சிறந்த ஜனநாயகமா?

மலேசியாவாவது உலகின் “சிறந்த ஜனநாயக நாடாக” மாறுவதாவது.இங்கேதான் மஞ்சள் நிற டி-சட்டை அணிந்தால் பிடித்து குற்றம் சுமத்துகிறார்களே.”

 

நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்படுகிறது

கலா: “மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க” விரும்புவதாக பிரதமர் நஜிப் கூறியுள்ளார். “நாட்டை மேம்படுத்துவதில் காணப்பட்ட வெற்றியும் மக்கள் கூடுதல் முதிர்ச்சி அடைந்திருப்பதும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கூடியிருப்பதும் இசா சட்டத்தை ரத்துச் செய்வதைச் சாத்தியமாக்கியுள்ளன”, என்றவர் சொன்னார்.

பொருளாதாரம், கல்வி ஆகியவற்றுடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அரசியல் உருமாற்றத்தின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.

பிஎன் அரசாங்கம் “மக்களுடைய நல்வாழ்வுக்காக எல்லா வகையிலும்” போராடி வரும் என்றாரவர்.

ஆனால், மனித உரிமைகள் மேம்படுத்தப்படாமல் ஐஎஸ்ஏ-யை ரத்துச் செய்வதால்(அப்படியே நம்புவோம்) மட்டுமே மலேசியா சிறந்த ஜனநாயக நாடாக மாறிவிடுமா?

முதலில்,சாதாரண மனிதரைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிர்வாகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, சட்ட ஆளுமை இருக்கிறதா? நைந்துபோன நீதித்துறை நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டிராமல் தனித்து இயங்குமா? போலீஸ் துறையினரும் தங்களுக்குரிய கடமைகளைச் செய்வார்களா அல்லது அரசாங்கத்தின் ‘உரிமம் பெற்ற குண்டர்கும்பல்’போல்தான் செயல்பட்டு வருவார்களா?

மூன்றாவதாக, ஊழல் எதிர்ப்புப் போராட்டம். திருட்டுக் கூட்டத்தின் கொட்டம் அடக்கப்படுமா?

நான்காவதாக, அச்சக, பதிப்பகச் சட்டம்(பிபிபிஏ) ரத்துச் செய்யப்படுமா? அது நடக்காது என்றால் ஏன் நடக்காது?

நஜிப் அவர்களே, ஐஎஸ்ஏ-யை அகற்றுவது மட்டும் போதாது.

ஃபூ: பிரதமர் அவர்களே, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதுடன் நின்றுவிடாதீர்கள். பிபிபிஏ, அதிகாரத்துவ இரகசியச் சட்டம்(ஓஎஸ்ஏ), இன்னும் பல கொடூரச் சட்டங்களும் உண்டு.

அப்புறம் நீதித்துறை, போலீஸ், அரசுச்சேவை ஆகியவையும் சுயேச்சையாக செயலபட வேண்டும். அதிகமாகக் கேட்கிறோனோ? ஆனால், “மலேசியா சிறந்த ஜனநாயகமாக மாற” இவையெல்லாம் தேவைதான்.

பல இனவாதி: மலேசியாவாவது உலகின் “சிறந்த ஜனநாயக நாடாக” மாறுவதாவது.இங்கேதான் மஞ்சள் நிற டி-சட்டை அணிந்தால் பிடித்து குற்றம் சுமத்துகிறார்களே. கதைவிட வேண்டாம். மலேசியர்கள் முட்டாள்கள் அல்லர்.

இம்ரான்: சில மாதங்களுக்குமுன், மலேசியர்கள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று சொல்லி தெரு ஆர்ப்பாட்டம் செய்தோரை அடித்து விரட்ட கலகத்தடுப்புப் போலீசை அனுப்பி வைத்தார் நஜிப்.இப்போது சொல்கிறார் மலேசியர்கள் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள் என்று.என்ன ஆயிற்று இவருக்கு?

பிடிஎன்: மலேசியர்களுக்கு மூளை இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறது அம்னோ. தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம். இவையெல்லான் அதற்காகத்தான்.

3நட்சத்திரங்கள்: ஐஎஸ்ஏ ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல என்பதை உணர அம்னோ/பிஎன் கோமாளிகளுக்கு 52 ஆண்டுகள் ஆனதா?எவ்வளவு காலம் வீணாகி விட்டது.

TAGS: