மெட்ரிகுலேசன் வாய்ப்பை 585 இந்திய மாணவர்கள் நிராகரிப்பு! ஏன்?, செனட்டர் இராமகிருஷ்ணன்

சமீப காலத்தில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்பு குறித்து நம் சமுதாயத்தில் பெரும் களேபரம் நிலவியது!

 

கடந்த ஜூலை 9ம் நாள் மேலவையில் அது குறித்து நான் பேசிய பின் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ வீ கா சியோங் விளக்கம் அளித்தார். அதாவது 2012/2013 ஆண்டுக்கான மெட்ரிகுலேசன் கல்லூரி நுழைவுக்கு 4,512 இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர் என்றும், அதற்கான இறுதி நாள் மே 28 ஆம் தேதி முடிவடைந்த பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முதல் கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என்றும் கூறினார்.

 

குறைந்த எண்ணிக்கை குறித்து அதிருப்தி கொண்ட இந்தியர்களிடமிருந்து பலதரப்பட்ட புகார்கள் எழும்பிய பின், கல்வி அமைச்சு 2 ஆம் கட்டப் பதிவுக்கு ஆவன செய்து மேலும் 539 இடங்கள் வழங்க இணக்கம் தெரிவித்தது. இந்த 2ஆம் கட்ட விண்ணப்பத்திற்கான முடிவு நாள் கடந்த ஜுன் 13 ஆம் தேதி.

 

எனினும், மெட்ரிகுலேசன் கல்லூரிகளில் படிப்பை மேற்கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட இந்திய மாணவர்களுள் இதுகாறும் 943 பேர் மட்டுமே அதாவது 61 விழுக்காட்டினர் மட்டுமே அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் ஏற்கனவே விண்ணப்பம் தள்ளுப்படி செய்யப்பட்ட இந்திய மாணவர்கள் மறு விண்ணப்பம் செய்யலாம் என துணைப் பிரதமருமாகிய கல்வி அமைச்சர் கடந்த ஜுலை 2 ஆம் தேதி அறிவித்தார். இதற்கான முடிவு நாள் இம்மாதம் 18 ஆம் தேதி.    

 

நமது ஆதங்கம் இதுதான்: மெட்ரிகுலேசன் படிப்பைப் பொறுத்தவரை, இந்திய மாணவர்களிடையே ஏன் இந்த ஆர்வக் குறைவு? உரிய தகவல் அவர்களை சென்றடையவில்லையா? இந்திய சமூகத்தின் பல கடுமையான விமர்சனங்களுக்குப்பின் கல்வி அமைச்சு பிரதமர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற 1,500 இடங்களை நிறைவு செய்ய முன்வந்துள்ளது. எனினும் ஆகக் கடைசியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் 943 மாணவர்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டதற்கும் 585 பேர் நிராகரித்தற்கும் என்ன காரணம்?

 

அரசியல்வாதிகளும், அரசாங்க சார்பற்ற இந்திய அமைப்புகளும் இதனை உடனடியாக ஆராய வேண்டும். மெட்குலேசனை விட மேலான படிப்பு வாய்ப்பு கிடைத்ததால் இந்திய மாணவர்களில் சிலர் அதனைத் தள்ளி வைத்தார்கள் என்றால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தாங்கள் விண்ணப்பித்த பாடத்துறை கிடைக்காமல் வேறொன்று ஒதுக்கப்பட்டிருப்பது, குறிப்பிட்ட கல்லூரியில் குறைந்த எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் இருப்பதால் எழக்கூடிய உணவுப் பிரச்னை, இறை வழிபாட்டுப் பிரச்னை போன்ற காரணங்கள் என்றால் அவற்றை நாம் கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம். அல்லது இக்காரணங்களுக்கும் அப்பாற்பட்டு, வெகு தூரத்தில் உள்ள மெட்ரிகுலேசன் கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கொடுக்கப்பட்டதால்  இந்திய மாணவர்கள் பின்வாங்குகின்றனரா?

 

இதனிடையே, கல்வி அமைச்சுக்கும் நாம் ஒரு கேள்வியை முன் வைக்கின்றோம். தொடக்கத்தில் அதிகமான இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உண்மையில் என்ன காரணம்? இந்திய மாணவர்களால் நிரப்பப்படாத இடங்களை மலாய் மாணவர்களுக்குக் கொடுப்பதற்கா?            

 

மெட்ரிகுலேசன் படிப்பில் இந்திய மாணவர்களின் உண்மையான மனப்போக்கு அல்லது எதிர்பார்ப்பு குறித்து அறிய முற்படுகிறோம். பொதுக்  கருத்தரங்கு, தகவல் ஊடகங்கள், இணையம் போன்றவற்றில் அது அலசி ஆராயப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் பலவீனத்தை பிற தரப்பினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கக் கூடாது!