அரசாங்கம் குற்றம் பற்றிய புள்ளிவிவரங்களை மூடி மறைப்பதாகக் குற்றஞ்சாட்டும் முன்னாள் போலீஸ் படைத்தலைவர் மூசா ஹசான் ஒரு “விளம்பரப் பிரியர்” என்று குறைகூறப்பட்டுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மூசாவின் பதவிக்காலத்தின்போதுதான் குற்றச்செயல் விகிதம் உச்சத்தை எட்டியிருந்தது என மலேசிய குற்றத்தடுப்பு அறநிறுவன(எம்சிபிஎப்) நிர்வாக மன்ற உறுப்பினர் ரோபர்ட் பாங் கூறினார்.
பாங், ஜூலை 5-இல் குற்றச்செயல் குறைப்பு மீதான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டதாகவும் அதில் செயல்திறன், நிர்வாகம், சேவையளிப்புப் பிரிவு(பெமாண்டு)2001 தொடக்கம் பதிவான மொத்த குற்றங்கள் பற்றிய விவரங்களை வழங்கியது என்றும் தெரிவித்தார்.
“அக்கலந்துரையாடலில் பெமாண்டு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 2006-இலிருந்து 2009வரை மலேசியாவில் குற்றச்செயல்கள் பெருக்கம் கண்டன.2006-க்கு முன்பு குற்றவிகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது” என்று பாங் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருந்தார்.
2009-இல் 209,817ஆக இருந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை 2010-இல் 177,520ஆகக் குறைந்தது என்று குறிப்பிட்ட பாங்,அதற்காக “குற்றத்தடுப்பு முயற்சிகளை எடுத்துக்கொண்ட” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேனையும் பாராட்டினார்.
“2006க்கும் 2009க்குமிடையில் குற்றங்களை எதிர்ப்பதில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது”.
இதுவும் அக்காலக்கட்டத்தில் குற்றங்கள் பெருகியதற்குக் காரணமாக இருக்கலாம் என்றாரவர்.
“உண்மை நிலவரம் இப்படியிருக்க மூசா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது, விளம்பரப் பிரியராகவும் இருக்கக்கூடாது”, என்று பாங் கூறினார்.
மூசா குற்றங்களைத் தடுப்பதிலும் எதிர்ப்பதிலும் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் போலீஸ் படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.