டிங்கில் தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு மாற்று வரிசை வீடுகள் கட்டச் சுமார் 18 நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜூலை 12, 2012 இல் சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் டாக்டர் சேவியர் கூறினார்.
அங்குக் கட்டப்பட்டுள்ள சில வீட்டு தொகுதிகளில் இரண்டு, நீண்ட நாள் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதால், மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிப்பாங் நில அலுவலகம் மாற்று நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் தேதி, ஒதுக்கப்பட்ட அவ்விடத்தில் அடையாளப் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த நிலத்தில் தொழிலாளர்களுக்குத் தனித்தனி பட்டா வழங்க முடியாது. அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜின் பாதிக்கப் பட்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள உறுதிமொழிப்படி மத்திய அரசாங்கம் வரிசை வீடுகள் கட்டி வழங்கிட வேண்டும்.
அதற்கு அவர்கள் அடையாளங்காணும் ஒரு நிறுவனம் அல்லது பாரிசான் மத்திய அரசாங்கம் அல்லது புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ், தாமான் பெர்மாத்தா நடவடிக்கை குழுவுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மேற்படி நிலம் அவர்களிடம் ஒப்படைப்பதற்கான வேலையை மாநிலப் பொருளாதாரச் செயல் குழு செய்யும் என்று சேவியர் கூறினார்.
புத்ராஜெயா கட்டுமானப் பணிக்கு 1999ஆம் ஆண்டு அப்போதைய பாரிசான் அரசாங்கம் பெராங் பெசார், சிர்ஜிலி, கேலவே, மிடிங்கிலீ ஆகிய 4 தோட்டங்களை எடுத்துக்கொண்டு, அங்கு வாழ்ந்த மக்களை டிங்கில் தாமான் பெர்மாத்தாவில் மறுகுடியேற்றம் செய்தது.
ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், முறையான பேச்சு வார்த்தையின்றி திடீர் வேலைநீக்கம் செய்யப்பட்டதாலும், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, எந்த மறுவாழ்வு திட்டமுமின்றி அந்நியர்களைவிடக் கேவலமாக விரட்டப்பட்டதால், அவர்களின் அன்றாட வாழ்வே சின்னபின்னமாகி விட்டது என்று சேவியர் மேலும் கூறினார்.
திடீர் வேலைநீக்கம் அவர்களை மட்டும் பாதிக்காமல் அவர்கள் பிள்ளைகளின் கல்வியையும் பாதித்து ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே அழித்துவிட்டது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அன்று ஆசை வார்த்தைகள் கூறி, அப்பட்டமாக ஏமாற்றியவர்கள் அனைவரும் இன்று பதுங்கி விட்டனர் என்றார்.
“அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஜின் கேட்டுகொண்டதைப் போன்று 100 ஏக்கர் நிலம் வழங்கப்படாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட மட்டுமே நிலம் வழங்க முடியும். தனது கட்சி வீடமைப்பு தரகர்களை கோடீஸ்வரர்கள் ஆக்க நிலம் வழங்க முடியாது”, என்று அவர் திட்டமாகக் கூறினார்.
“அன்றைய பிரதமர் மகாதீர் தனது கனவு திட்டமான புத்ரா ஜெயாவை நிர்மாணிக்க, 400 தோட்டப்பாட்டாளிகளின் குடும்பங்களுக்கு 13 ஆண்டுகளாக நித்திரையே இல்லாமல் செய்து விட்டார். இன்றைய புத்ரா ஜெயாவின் பூர்வீகக்குடிகளாக இருக்க வேண்டியவர்களை, அங்கு வாக்காளர்களாகக்கூட இருக்கத் தகுதியில்லாமல் அழித்து விட்டது பாரிசான் அரசு”, என்று அவர் இடித்துரைத்தார்.
“இன்று புத்ரா ஜெயா முழுமை பெற்று வருகிறது. புத்ரா ஜெயாவில் முறையான வீடுகள் கட்டி பாரிசான் அவர்களை மீண்டும் அங்கு குடியமர்த்தி இருக்க வேண்டும். அதைத்தான் செய்யவில்லை, குறைந்தது நாம் ஒதுக்கித் தந்துள்ள இடத்திலாவது ஒழுங்கான வீடுகளைக் கட்டி தருவர்களா என்று பார்ப்போம்”, என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.