1960ம் ஆண்டு இயற்றப்பட்ட இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்கம் முன்னாள் இசா கைதிகளிடம் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை இழப்பீடும் கொடுக்கப் போவதில்லை.
இவ்வாறு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அவர் அது தொடர்பான வேண்டுகோட்கள் பற்றிக் கருத்துரைத்தார்.
சட்டத்தின் மூலம் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம் சட்டப்பூர்வமாக அந்த முன்னாள் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
“எடுத்துக்காட்டுக்கு திருட்டு இனிமேலும் குற்றமில்லை எனக் கருதப்பட்டால், அரசாங்கம் எல்லாத் திருடர்களிடமும் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு கொடுக்க வேண்டுமா? நிச்சயமாக அதனைச் செய்ய முடியாது. ஏனெனில் திருட்டு என்பது சட்டம் நடப்பில் இருந்தபோது அது அதற்கு எதிரானதாகும்.”
“அரசாங்கம் சட்டத்துக்கு புறம்பாக ஏதும் செய்திருந்தால் அது மாறுபட்ட சூழ்நிலையாகும்”, என அவர் சின் சியூ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அவர் நேற்று கோலா கங்சாரில் உள்ள தமது இல்லத்தில் அந்த ஏட்டுக்கு பேட்டி அளித்தார்.
இதனிடையே இசா அல்லது அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பயங்கரவாதத்தில் சம்பந்தப்படாத கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற தகவலையும் நஸ்ரி வெளியிட்டார்.
“அமைச்சரவை போலீஸ், சட்டத்துறைத் தலைவர் ஆகியோரது கருத்துக்களை கண்டறியும். அந்தக் கைதிகளை விடுவிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கக் கூடும்.”
பயங்கரவாதத்தில் சம்பந்தப்படாத, தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இல்லாதவர்களை விடுவிக்கும் யோசனையை நான் வரவேற்கிறேன். அரசாங்கம் அவர்களைத் தனித்தனியாக பரிசீலினை செய்யும். போதுமான ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது அரசாங்கம் குற்றம் சாட்டும். இல்லை என்றால் அவர்களை விடுதலை செய்யும்.”
இசா சட்டத்தை அரசாங்கம் ரத்துச் செய்யும் என கடந்த வியாழக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் முன்னாள் இசா கைதிகளிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர்கள் அனுபவித்த துயரங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் இசா கைதிகளும் அரசு சாரா அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இசா கைதிகளை சித்தரவதை செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும் இசா சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என போராட்டம் நடத்தும் ஜிஎம்ஐ என்னும் அமைப்பின் தலைவர் சையட் இப்ராஹிம் சையட் நோ கூறினார்.
இசா ரத்துச் செய்யப்படும் என்ற அறிவிப்பை விடுத்த போது பயங்கரவாதத்தை முறியடிக்க இரண்டு புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் நஜிப் கூறினார்.
அந்தப் புதிய சட்டங்கள் தடுத்து வைக்கப்படுவதற்கு வகை செய்யும் என்றும் நஸ்ரி தெரிவித்தார்.