கேடிஎம் ரயில்களிலும் நிலையங்களிலும் நஜிப் நிர்வாகத்துக்கு பிரச்சாரம்

சிலாங்கூரில் ரயில் பயணிகளிடம் நஜிப் நிர்வாகத்த்தை விளம்பரப்படுத்துவதற்குக் அண்மைய காலமாக கேடிஎம் கமுயூட்டர் ரயில்களும் ரயில் நிலையங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை மய்யமாகக் கொண்டு ‘சிலாங்கூரை நேசியுங்கள்’ ( Sayangi Selangor ) என்ற விளம்பர இயக்கத்திற்கு ரயில் பெட்டிகளும் நிலையங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது மலேசியாகினி நடத்திய ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.

“வாழ்க்கை செலவுகள் மீதான உங்கள் பிரச்னைகளை நாங்கள் செவிமடுக்கிறோம்”, “கல்வி மீதான உங்கள் தேவைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். புரிந்து கொள்கிறோம்” என்பது அந்த விளம்பர இயக்கத்துக்கான வாசகங்களாகும்.

அந்தச் செய்திகள் ரயில் பெட்டிகளிலும் தூண்களிலும் ரயில் நிலைய மின் படிகளிலும் காணப்படுகின்றன.

குழந்தைகள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள மக்களுக்கு நஜிப் செவி சாய்ப்பது போன்ற படம் அதில் காணப்பட்டது.

பக்காத்தான் ராக்யாட் வசம் உள்ள பகுதிகள் வழியாக செல்லும் கேஎல் சென்டரல்- போர்ட் கிளாங் பாதையை அந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு யார் பிஎன் தேர்வு என்பது இன்னும் உறுதியாகத் தெரியாததால் அந்த இயக்கத்தின் மய்யமாக நஜிப் விளங்குவதாக நம்பப்படுகின்றது.

நஜிப் சிலாங்கூர் அம்னோ தலைவர் ஆவார். கேடிஎம் என்ற Keretapi Tanah Melayu Bhd தலைவரான முகமட் ஜின் முகமட் மாநில பிஎன் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

ஏற்கனவே கோலாலம்பூர்-போர்ட் கிளாங் பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது பற்றிய தகவலை மலேசியாகினி வெளியிட்டது.

அந்தக் கொடிகளை பறக்க விடுமாறு தாம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என முகமட் ஜின் அப்போது கூறினார்.

 

TAGS: