கோலா டைமன்சி-யிடமிருந்து வெகுமதி பெறவில்லை என்கிறார் லிங்

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டத்துக்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பில் கோலா டைமன்சி சென் பெர்ஹாட்-டிடமிருந்து  (KDSB) எந்த வடிவத்திலும் வெகுமதி எதனையும் பெறவில்லை என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் கியாங் சிக் அத்துடன் தாம் KDSB-யின் பேச்சாளராக இருந்ததாகக் கூறப்படுவதையும் அந்த முன்னாள் மசீச தலைவர் மறுத்தார்.

69 வயதான லிங் இன்று தமது எதிர்வாதத்தில் சாட்சியமளித்தார். அந்த நிலக் கொள்முதல் தொடர்பாக  KDSB -யுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

தமது அமைச்சு ஊழியர்களும் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் மதிப்பீட்டு சொத்துச் சேவைத் துறையின் ஊழியர்களும்  தொழில் நுட்ப விவரங்களைத் தயாரித்தனர் என்றும் லிங் தெரிவித்தார்.

“830 ஏக்கர் நிலத்தை கொள்முதல் செய்வதற்கான யோசனை மீது KDSB-யின் தியோங் கிங் சிங்-கிற்கு அமைச்சின் உயர் நிலை உதவிச் செயலாளர் (கடல் போக்குவரத்து) பி சந்திரசேகரன் 2000ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி எழுதிய கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.”

“என் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னரே நான் அந்தக் கடிதத்தைப் பார்த்தேன்,” என தமது வழக்குரைஞர் வோங் கியான் கியோங் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த போது லிங் கூறினார்.

அந்த நிலம் சம்பந்தமாக மதிப்பீட்டு சொத்துச் சேவைத் துறை தயாரித்த மதிப்பீடு பற்றியும் தமக்கு ஒன்றும் தெரியாது என்றும் அவர் சொன்னார். நிதி அமைச்சின் கீழ் அந்த மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதே அதற்குக் காரணமாகும்.

நில மதிப்பீட்டக்கான தகுதிகள் அல்லது அது குறித்த அறிவாற்றலோ தமக்கு இல்லை என்றும் அந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சொன்னார். அதனால் தமது அதிகாரிகளும் மதிப்பீட்டு சொத்துச் சேவைத் துறையும் மேற்கொண்ட மதிப்பீடுகளையே தாம் நம்பியிருக்க வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மதிப்பீடுகளைச் செய்வதற்கு போக்குவரத்து அமைச்சில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் மதிப்பீட்டு சொத்துச் சேவைத் துறையின் மதிப்பீடுகளை பின்பற்றுமாறு நான் என் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.”

வோங்-கின் இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்த லிங், அந்த நிலம் கொள்முதல் செய்யப்பட்டது, அதன் மேம்பாடு ஆகியவை தொடர்பில் KDSB-டிடமிருந்து எந்த விதமான வெகுமதியையும் பெறவில்லை எனச் சொன்னார்.

 

TAGS: