பொதுச் சேவைத்துறை தலைமை இயக்குனர் அபு பக்கார் அப்துல்லா சர்ச்சைக்குரிய முறையில் பணிநீக்கம் செய்யப்பட காரணமாக இருந்தவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் என்றும் அதற்கான கடிதத்தில் அவரே கையொப்பமிட்டிருந்தார் என்றும் பாஸ் கூறுகிறது.
1993 பொதுச்சேவை ஊழியர்களுக்கான விதிமுறைகளின்(நன்னடத்தை மற்றும் கட்டொழுங்கு) 49வது விதிமுறையின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்படுவதாக அக்கடிதம் சுட்டிக்காட்டியதாக பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார்(வலம்) கூறினார்.
ஆனால், அதைப் பற்றிய விளக்கம் இல்லை என்றாரவர்.
“கடிதத்தின் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது.அதைக் காண்பிக்க முடியாது.ஏனென்றால் அது அதிகாரத்துவ ரகசியத்தின்கீழ் வருகிறது”.மாபுஸ் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“பிரதமர் அதை மறுப்பதானால் மறுக்கலாம்.அதில் கையொப்பம் இட்டவர் யாரோ அவர்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்”, என்றவர் மேலும் கூறினார்.