தனியார் துறையில் சிலர் கையூட்டுக் கொடுப்பதை ஒரு குற்றமாகக் கருதவில்லை என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) உயர் அதிகாரி ஒருவர்.
அதனால்தான் ஊழல் பற்றிய புகார் செய்வதில் தனியார் துறையிடமிருந்து போதுமான ஆதரவு கிடைப்பதில்லை என்று அதன் துணைத் தலைமை ஆணையர் சுதினா சூட்டன்(வலம்) கூறினார்.
“அரசுத்துறையில்தான் ஊழலுக்காக அதிகமானோர் கைது செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.ஏனென்றால் தனியார்துறை அதைப் பற்றிப் புகார் செய்ய முன்வருவதில்லை.
“தொழிலில் அது சகஜம் என்று நினைக்கிறார்கள் போலும்”. இன்று கோலாலம்பூரில் பிபி ஏசியா-பசிபிக் சென்.பெர்ஹாட், எம்ஏசிசியுடன் நிறுவன நேர்மை வாக்குறுதி(சிஐபி) ஆவணத்தில் கையொப்பமிட்ட நிகழ்வில் சுதினா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கையூட்டு கொடுப்பது குற்றமல்ல, வாங்குவதுதான் குற்றம் என்று தனியார்துறையில் பலரும் நினைப்பதாக சுதினா கூறினார்.
கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்தான்.கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தண்டனை ஒன்றுதான் என்றாரவர்.இதைப் பற்றி மேலும் உணர்த்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஊழல் தொடர்பில் ஆண்டுக்கு சுமார் 6,000 புகார்களை எம்ஏசிசி பெறுகிறது.அவற்றில் சிலவற்றில் ஊழலுக்கான அடையாளமே இருக்காது என்றாரவர்.
சிஐபி பற்றிக் குறிப்பிட்டவர் இதுவரை 103 நிறுவனங்கள் அதில் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறினார்.
-பெர்னாமா